பகுதி 2
அதே நேரத்தில்… மன்னர் வீர சிவாஜியும், ராமதாசரைத் தரிசிக்க விரும்பிப் பல்லக்கில் ஏறிப் படைகளோடு புறப்பட்டு, நகர எல்லையைத் தாண்டி வந்து கொண்டிருந்தார். வந்த சிவாஜி, தூரத்தில் தம் குருநாதர் வருவதைப் பார்த்ததும், உடனே பல்லக்கில் இருந்து இறங்கி விரைவாக நடந்து வந்து, குருநாதரை வணங்கிப் பணிவோடு ஏதோ பேசினார். ராமதாசர் பதிலேதும் சொல்லவில்லை; மௌனமாகவே இருந்தார்.
அதையே சம்மதமாகக் கொண்ட சிவாஜி, தன் வீரர்களுக்கு ஏதோ குறிப்பு காட்ட, பல்லக்கு அருகில் கொண்டுவரப் பட்டது. அந்தப் பல்லக்கில் ராமதாசரை அமர்த்தி, அவருக்கு வெண் சாமரம் வீசிய படியே நடந்தார் மன்னர் சிவாஜி. பல்லக்கு நகரத்திற்குள் நுழைந்தது. மங்கல வாத்தியங்கள் அனைத்தும் முழங்க, அரண்மனைக்குள் நுழைந்தார்கள். பல்லக்கை விட்டு இறங்கினார் ராமதாசர்.
வேத வல்லுநர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு, குருநாதரை அழைத்துச் சென்ற சிவாஜி, வாசனை கலந்த இளம் சூடான வெந்நீரில், தானே குருநாதரை நீராட்டினார்.
அப்போது, குருநாதரின் முதுகைத் தேய்க்கும்போது, முதுகில் ஏராளமான காயங்கள் இருந்ததைப் பார்த்தார் சிவாஜி; திடுக்கிட்டுப்போய், ‘‘குருநாதா! என்ன இது?’’ எனக் கேட்டார்.
‘‘ஒன்றுமில்லை’’ என்ற ராமதாசர், வேறு எதையோ பேசி, பேச்சை மாற்றி விட்டார். சிவாஜியும் வற்புறுத்தவில்லை. நீராட்டம் முடிந்ததும் குருநாதரைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, அவருடைய திருவடிகளைத் தானே அலம்பி, குருப்பிரசாதமாகச்சிறிதளவு உட்கொண்டார். குருநாதர் உட்பட வேத வல்லுநர்கள் உண்டு முடித்து,சிவாஜிக்கு ஆசி கூறினார்கள்.
அதன்பின் குருநாதரை ஓய்வெடுக்கச் சொன்ன சிவாஜி, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து முடித்தார். அங்கிருந்து திரும்பிய சிவாஜி, குருநாதர் சாப்பிட்ட எச்சில் இலையை எடுத்துக் கொண்டு, தனியாக ஓர் இடத்திற்குச் சென்று அமர்ந்தார். அந்த எச்சில் இலையில் தமக்குப் பரிமாறச் சொன்னார். அதே சமயம் தத்துவைக் கூப்பிட்டு, அவனுக்கும் ஓர் இலையைப்போட்டுப் பரிமாறச்சொன்னார்.அதைக் கேட்டுச் சமையற்காரர்கள் வியந்தார்கள்; ‘‘இவனுக்குப் போய், இலையைப்போட்டுப் பரிமாறச்சொல்லி, இவனுக்குச்சமமாகத் தானும் அமர்ந்து சாப்பிடத் தயாராகி விட்டாரே! இதை எங்கு போய்ச் சொல்வது?’’ என்று எண்ணினார்கள்.
மன்னரின் செயல்களைக்கண்டு, சாப்பாட்டு அறைக்கு வெளியே இருந்த மந்திரிகளும் அதிர்ச்சி அடைந்தார்கள்;
‘‘நம் மன்னருக்கு என்னதான் குருபக்தி இருந்தாலும், இவனுக்கு இவ்வளவு உயர்வு அளிக்க வேண்டுமா என்ன?’’ என்றுதங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். இவர்கள் எல்லோரும் இப்படிப் பலவிதமாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும், உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்த சிவாஜி மெள்…ளத் தத்துவிடம் பேசத் தொடங்கினார்;“தத்து! குருநாதர் முதுகில் ஏராளமான காயங்கள் இருக்கின்றனவே! காரணம்என்ன?’’ என்று கேட்டார். தத்து மறுத்தான்;
‘‘மன்னித்து விடுங்கள் மகாராஜா! மன்னித்து விடுங்கள்! அதைப்பற்றித் தங்களிடம் எதுவும் சொல்லக்கூடாது என்று குருநாதர் சொல்லி இருக்கிறார்’’ என்றான். மன்னர் மறுபடியும் வற்புறுத்திக் கேட்டார்.தத்துவோ, ‘‘குருவின் பேச்சை மீறமாட்டேன் மன்னா!’’ என்று பிடிவாதமாக மறுத்து விட்டான். சிவாஜியும் விடுவதாக இல்லை; ‘‘அப்படியா? சரி! நீ உண்மையைச் சொல்லும்வரை, நான் சாப்பிடப் போவதில்லை. இந்த ஒருவேளை மட்டுமல்ல; நீ உண்மையைச் சொல்லும் வரை, நான் உண்ணாவிரதம்தான் இருக்கப் போகிறேன்’’ என்றபடியே சாப்பாட்டை ஒதுக்கி வைத்தார் வீர சிவாஜி. தத்து ஒன்றும் புரியாமல் தவித்தான்; ‘‘என்ன இது? உண்மையைச் சொன்னால், குருவின் வார்த்தையை மீறியதாகும்.
சொல்லாவிட்டால், மாமன்னரின் பட்டினிக்குக் காரணமாவேன் நான். இந்த சிவாஜி மன்னரும் சொன்னதைச் செய்பவராகத் தெரிகிறார். பட்டினி இருந்து, இறந்தாலும் இறப்பாரே தவிர, தன் வாக்கிலிருந்து மாற மாட்டார் என்பதும் தெரிகிறது. என்ன செய்வது?’’ என்று யோசித்தான் தத்து. முடிவில், நடப்பது நடக்கட்டும். எனக்கு என்ன பாவம் வந்தாலும் பரவாயில்லை. மன்னரைப் பட்டினி போடக்கூடாது என்று தீர்மானித்த தத்து, நடந்தது எல்லாவற்றையும் மன்னரிடம் சொல்லிவிட்டான்.
தத்து சொல்லி முடித்த அதே விநாடியில், ‘‘அந்தச் சோளக் கொல்லைக் காவலாளிகளை இங்கே அழைத்து வாருங்கள்!’’ எனக் கட்டளையிட்டார் சிவாஜி. வீரர்கள் ஓடினார்கள். அவர்கள் போனதும், ‘‘சாப்பாடு போதும்!’’ என்று கைகளை அலம்பிக்கொண்ட சிவாஜி, தத்துவை வற்புறுத்திச் சாப்பிட வைத்தார். தத்து சாப்பிட்டு முடித்ததும், அவனையும் அழைத்துக் கொண்டு, ராமதாசர் இருக்கும் இடத்திற்கு வந்தார் சிவாஜி. அங்கே ராமதாசரின் முன்னால், ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். குருநாதரை வணங்கி சிவாஜியும் அமர்ந்தார்.
அனைவர் நெஞ்சங்களிலும் ராமரை அமர்த்தும் விதமாக ராமதாசர், ராமரைப் போற்றும் கீர்த்தனையைப் பாடிக் கொண்டிருந்தார். அந்த இடமே பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தது. கீர்த்தனை முடிந்தது. அப்போது சிவாஜியை நெருங்கிய மந்திரி, அவரை வணங்கி, ‘‘சோளக்கொல்லைக் காவலாளிகள் வந்திருக்கிறார்கள்’’ என்றார். மந்திரியின் வாக்கு ராமதாசரின் காதுகளிலும் விழுந்தது. உடனே அவர், ‘‘சிவாஜி! அந்தக் காவலாளிகளை என்னிடம் அழைத்து வா!’’ காவலாளிகளைக் கயிறுகளால் கட்டிக்கொண்டு வந்து, ராமதாசர் முன்னால் நிறுத்தினார்கள். இவர்களின் கட்டுக்களை எல்லாம் அவிழ்த்து விடுங்கள்!’’ என்றார் ராமதாசர்.
கட்டுக்களை அவிழ்த்ததும் மன்னர் பக்கம் திரும்பிய ராமதாசர், ‘‘சிவாஜி! இந்தக் காவலர்களுக்கு விலை உயர்ந்த ஆடைகள், அலங்கார ஆபரணங்கள் எல்லாம் கொடு! கூடவே, அவர்கள் விவசாயம் செய்யும் நிலத்தையும் அவர்களுக்கே சொந்தமானதாகக் கொடு! நீ எனக்குத்தரும் குருதட்சிணை இதுவே!’’ என்றார். அதைக் கேட்ட மன்னர் வீரசிவாஜி திடுக்கிட்டார்; திகைத்தார்; ‘‘குருநாதா! இவர்கள் த(உ)ங்களை அடித்து, மாபெரும் பாவம் செய்தவர்கள். இவர்களுக்குத் தண்டனை தருவதை விட்டு, இவர்களுக்குச் சன்மானங்கள் தருவதுசரியா?’’ எனக் கேட்டார். ராமதாசர் அமைதியாகப் பதில் சொன்னார்; ‘‘மன்னா! சிவாஜி! இதை, எனக்கு ஏற்பட்ட ஒரு பரிசோதனையாகவே நான் நினைக்கிறேன். பொறுமை என்னும் சிறந்த குணம், எனக்கு முழுமையாக இருக்கிறதா – இல்லையா?என்பதை நானே அறிந்து கொள்ள, இந்தச் சம்பவம் எனக்கு உதவியிருக்கிறது.
ஆகவே இவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டாம்’’ என்றார். குருநாதரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னர் சிவாஜி, அவர் விருப்பப்படியே சோளக்கொல்லைக் காவலர்களை விடுதலை செய்து, அவர்களுக்கு வெகுமதிகள் கொடுத்து, அவர்கள் விவசாயம் செய்துவந்த நிலத்தை அவர்களுக்கே உரிமை ஆக்கவும் செய்தார்.
உத்தமமானவர்களுக்கும் துயரங்கள் வரும். அதை அந்த ஒழுக்க சீலர்கள், தங்களை மேலும் பக்குவம் பெறச் செய்வதற்காகவே தெய்வம் அவ்வாறு செய்கிறது என்பதை உணர்வார்கள். அதற்கேற்பப் பொறுமையாகச் செயல்பட்டு, அந்தச் சோதனையில் வெல்வார்கள். உத்தமமான துறவிகள் பலருக்கும் கஷ்டங்கள் ஏற்பட இதுவே காரணம்.உதாரணம்: பட்டினத்தார், பத்திரகிரியார், ரமண மகரிஷி, ஆதிசங்கரர் என ஏராளமான மகான்கள், இதற்கு உதாரணமாக இருந்து, வழிகாட்டி இருக்கிறார்கள்.உணர்வோம்! உயர்வோம்!.