Thursday, July 10, 2025
Home ஆன்மிகம் சமர்த்த ராமதாசர்

சமர்த்த ராமதாசர்

by Porselvi

சமர்த்த ராமதாசர்! வீர சிவாஜியின் குருவாக இருந்தவர்! இவரைக் கேட்காமல், இவரைக் கலந்து ஆலோசிக்காமல், வீர சிவாஜி எந்த முடிவும் எடுக்க மாட்டார்.அப்படிப்பட்ட ராமதாசர், ஒரு சமயம் தனிமையில் அமர்ந்திருந்தார். அப்போது, தத்து என்பவன் வந்து ராமதாசரை வணங்கி, ‘‘சுவாமி! என் பெயர் தத்து. அடியேனைத் தாங்கள், சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என வேண்டினான்.

ராமதாசர் மறுத்தார்.‘‘அப்பா! இப்போது உனக்கு நான் உபதேசம் செய்ய இயலாது’’ என்றார்.தத்து விடவில்லை. ‘‘சுவாமி! தங்களுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியத்தை மட்டும், அடியேனுக்குத் தந்தால் போதும்’’ என்று, மறுபடியும் வணங்கினான்.ராமதாசர் ஏற்றார்; ‘‘சரி! எப்போதும் என் கூடவே இரு! நல்லதுதான். இருப்பாயா?’’ எனக் கேட்டார்.‘‘இருப்பேன்!’’ என்று சொன்ன தத்து, கைகளைக் கூப்பி ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.அன்று முதல் தத்து, ராமதாசருக்குப் பணிவிடைகள் செய்வதில் தீவிரமாக இறங்கினான்; ஸ்ரீ ராமரைத் தியானிப்பது; பிட்சை எடுப்பது; பிட்சையாக வந்த தானியங்களை உணவாக்கி, குரு நாதருக்கு இட்டுவிட்டு அதன் பிறகு, தான் உண்பது-என்று நாட்களைக் கழித்து வந்தான், தத்து.

தத்துவின் பணிவிடைகளும் நற்குணங்களும் ராமதாசரைக் கவர்ந்தன; ‘‘இவன் உபதேசம் பெறத் தகுந்தவனாக ஆகிவிட்டான்’’ என்று தீர்மானித்த அவர், தத்துவிற்கு உபதேசம் செய்து
அருளினார். உபதேசம் பெற்ற தத்துவோ,அதற்காகச் சற்றும் கர்வம் கொள்ளாமல்,முன்பை விடத் தீவிரமாகக் குருநாதரின் பணி விடைகளில் ஈடுபட்டான்; பிரதிபலனாக வேறொன்றையும் அவன் நாடவில்லை. அதன் காரணமாகக் குருவருள் கை கூடியது அவனுக்கு.ஒருநாள், ‘‘தத்து! மன்னன் சிவாஜி, என்னைக் காண விரும்பு கிறான். வா! போகலாம்’’ என்று புறப்பட்டார் ராமதாசர். ஒரு பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, கூடவே புறப்பட்டான் தத்து.

வழிநெடுக, ராம நாமத்தை-ராம குணங்களைப் பாடிக்கொண்டே, பிரம்மானந்தத்தை அனுபவித்தபடி ராமதாசர் நடக்க, அதைத் தானும் அனுபவித்தவாறு பின் தொடர்ந்தான் தத்து.இருவருமாக ‘சதாரா’ என்ற ஊரை அடைந்தார்கள்.அங்கிருந்த ஒரு பெருங் கிணற்றைப் பார்த்தவுடன், அதில் இறங்கி நீராடத் தொடங்கினார் ராமதாசர். கரையின்மேல் நின்றபடியே, சுற்றுமுற்றும் பார்த்தான் தத்து. நன்கு விளைந்த சோளக்கொல்லை ஒன்று இருப்பது தெரிந்தது. உடனே, அவன் பரபரப்போடு, ‘‘குருநாதா! பக்கத்தில் ஒரு சோளக்கொல்லை இருக்கிறது. சோளக் கதிர்களும் நன்கு விளைந்து, சாப்பிடக் கூடிய அளவிற்குப் பக்குவமாக இருக்கிறது. சில கதிர்களைப் பறித்து வருகிறேன். நாம் சாப்பிடலாம்’’ என்றான்.

இந்த இடத்தில் தத்துவைப் பற்றிய தகவல் ஒன்று. ராமதாசரிடம் பற்பல சீடர்கள் இருந்திருக்கிறார்கள். சிலர் அவர்களாகவே விலகி விடுவார்கள்; சிலரை ராமதாசரே போகச் சொல்லி அனுப்பிவிடுவார். ஆனால் அவருடன் கடைசிவரை எப்போதும் கூட இருந்து தொண்டாற்றும் பாக்கியம் தத்துவிற்கு மட்டுமே கிடைத்தது. ராமதாசரிடம் வந்து சேர்ந்து தொண்டுகள் செய்து, கொஞ்ச நாட்களிலேயே பக்குவம் பெற்ற தத்து; உபதேசம் பெற்ற. தத்து; ருசியான உணவு வகைகளைச் சாப்பிடும்போது, மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவான். அவனுக்குப் பிடித்தமான ருசியான உணவு வகைகளைப் பார்த்தால், அவனை அறியாமலே அவன் நாக்கில் உமிழ்நீர் ஊறும்.

என்ன செய்ய? அனைத்திலும் பக்குவம் பெற்றுத் தேர்ச்சியும் பெற்ற தத்து, நாக்கை அடக்கும் தேர்வில் மட்டும் இன்னும் வெற்றி பெறவில்லை. அதிலும் அவனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதே ராமதாசரின் எண்ணம்.இதுபோன்ற விவரங்களை, மகான்கள் உபதேசம் செய்ய மாட்டார்கள்; தகுந்த சந்தர்ப்பம் வாய்க்கும்போது, நேரடியாகவே உணர்த்தி விடுவார்கள்; அல்லது, சந்தர்ப்பத்தை வரவழைத்து உணர்த்திவிடுவார்கள்.

அப்படியான ஓர் ஏற்பாட்டைத்தான்,நாவடக்கம் இல்லாத தத்துவிற்கு அதை உணர்த்துவதற்கு, ராமதாசர் எண்ணம் கொண்டார். அதற்காகவே நடந்த நிகழ்ச்சி இது. நன்கு விளைந்திருந்த சோளக்கதிர்களைப் பார்த்ததும், (உரியவர் அனுமதியின்றி) அவற்றில் சிலவற்றைப் பறித்து உண்ண வேண்டும் – என்ற தத்துவைத் தடுத்தார் ராமதாசர்.‘‘கூடாது தத்து! வேண்டாம். அதிவிரைவில் நகரத்திற்குப் போவோம். அங்கே உனக்கு ராஜ உணவு கிடைக்கும்’’ என்றார் ராமதாசர்.

ஆனால் தத்துவோ அதைக்கேட்கத் தயாராக இல்லை; ‘‘இதில் என்ன தப்பு? இவ்வளவு பெரிய சோளக்கொல்லையில் ஒருசில கதிர்களைப் பறிப்பதால், என்ன குறைந்துபோய்விடும்? குருநாதர் நீராடி முடித்து மேலே வந்ததும், ‘நான் பறித்து வந்து விட்டேன்’ என்று சொன்னால், ஒன்றும் சொல்ல மாட்டார், என்று எண்ணினான் தத்து. எண்ணம் உடனே செயலானது.தத்து உடனே போய் சோளக்கொல்லையில் இருந்து, சில சோளக்கதிர்களைப் பறித்தான். அதைப்பார்த்த காவலாளிகள் ஓடி வந்து, தத்துவைப் பிடித்து அடிக்கத் தொடங்கினார்கள்.அடி தாங்காமல் அவர்களிடம் இருந்து தப்பிப்பிழைத்து, குரு நாதர் நீராடிக் கொண்டிருந்த கிணற்றை நோக்கி ஓடி வந்தான் தத்து.

அதற்குள் ராமதாசர் நீராடி முடித்து மேலே வந்து, தியானத்தில் அமர்ந்திருந்தார். ‘‘குருவே! குருவே!’’ என்று கத்தியபடியே ராமதாசரிடம் ஓடி வந்தான், தத்து. அவனைத் துரத்திக்கொண்டு வந்த காவலர்கள், ராமதாசரைப் பார்த்ததும், ‘‘ஏய்! இந்தத் திருடனின் கூட்டாளியா நீ?’’ என்று மிரட்டி, ராமதாசரின் முதுகில் சாட்டையால் அடித்தார்கள்.தியானம் கலைந்து கண் விழித்த ராமதாசர் சிரித்தார்.

அதைப்பார்த்த காவலாளிகள், ‘‘இவர் யாரோ ஒரு பக்தர் போலிருக்கிறது. இவரைப்போய் அடித்து விட்டோமே!’’ என்று வருந்தினார்கள். ராமதாசரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, ‘‘சாமி! மன்னிச்சிடுங்க! எங்க தெய்வம் ‘மசோபா’ தேவதைக்குப் பூசை போடாம தானியங்களை எச்சலாக்கக் கூடாது. அதனால்தான்! உங்கள அடிச்சது தப்புதான். மன்னிச்சிடுங்க! மன்னிச்சிடுங்க!’’ என்று மன்னிப்பு வேண்டிப் போனார்கள். ராமதாசர் திரும்பி, தத்துவைப் பார்த்தார்.அவன் துக்கம் தாங்காமல் குமுறிக்குமுறி அழுது கொண்டிருந்தான்.‘‘தத்து எதற்காக அழுகிறாய்? நடந்து போனதைக்குறித்து, வருத்தப்படுவதால் என்ன பயன்?’’ எனக் கேட்டார் ராமதாசர்.

கண்களைத் துடைத்துக்கொண்டு, அழுகையைப் கட்டுப்படுத்திக்கொண்ட தத்து, ‘‘சுவாமி! கதிர்களை அறுத்தது நான். அதற்காக, அவர்கள் என்னை அடித்தது நியாயம். ஆனால், தெய்வத்திற்குச் சமமான த(உ)ங்களை அடித்துவிட்டார்களே! இதற்குக் காரணம் நான்தானே!’’ என்று குமுறினான்.அவனை அமைதிப் படுத்திய ராமதாசர், ‘‘வருத்தப்படாதே தத்து! வருத்தப்படாதே! ராமபக்தர்கள் மான-அவமானங்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். ராம பக்தர்கள் ஒரு நாளும் வருத்த மடைய மாட்டார்கள்; யாராவது தங்களைத் திட்டினாலும்-அடித்தாலும், அது தமக்கில்லை என்று இருப்பார்கள்;பணம்-பொருள் முதலானவற்றைத் திருடர்கள் கொண்டு போனாலும், அவைக ளைத் திரும்ப அடைய முயற்சி செய்ய மாட்டார்கள்; எப்போதும் ராமரை நினைத்துக் கொண்டிருப்பதே பேரானந்தம் என்று இருப்பார்கள்.

‘‘உனக்கு இப்போது, துக்கம் ஏன் ஏற்பட்டு இருக்கிறது தெரியுமா? சோளக்கதிர்களைச் சாப்பிடுவதில் சுகம் கிடைக்கும் என்று, நீ ஆசைப்பட்டுப் போனாய். அதனால் அடி பட்டாய்!துக்கப்படுகிறாய்!‘‘சுகம் வேண்டும் என்று நினைப் பவன், கண்டிப்பாகத் துக்கத்தையும் அனுபவிக்கத்தான் வேண்டும். துக்கம் வேண்டாம் என்று நினைப்பவன், முதலில் சுகம் வேண்டாம் என்று ஒதுக்க வேண்டும். ஒன்றில்லாமல் ஒன்றில்லை.‘‘தத்து! சுகத்தையும் துக்கத்தையும்

இல்லாமல் செய்யும் வைராக்கியத்தை அடைந்தவனே, ஸ்ரீ ராமரின் கருணையை அடைய முடியும்’’ என்று நிதானமாகச் சொன்னார்.தத்து எந்த ஞானத்தை அடைய வேண்டும் என்று ராமதாசர் விரும்பினாரோ, அந்த ஞானத்தை அடைந்தான் தத்து. ஆம்! தத்து தெளிவு பெற்றான்; கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, போய் முகத்தை அலம்பிக்கொண்டு திரும்பினான்; குரு நாதரின் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்தான்.‘‘சரி தத்து! புறப்படலாம் வா! ஞாபகம் வைத்துக்கொள்! இங்கு நடந்த எதையும், மன்னனிடம் சொல்லிவிடாதே!’’ என்று சொன்னபடியே எழுந்து, நடக்கத் தொடங்கினார் ராமதாசர்.

அதே நேரத்தில்… மன்னர் வீர சிவாஜியும், ராமதாசரைத் தரிசிக்க விரும்பிப் பல்லக்கில் ஏறிப் படைகளோடு புறப்பட்டு, நகர எல்லையைத் தாண்டி வந்து கொண்டிருந்தார்.வந்த சிவாஜி, தூரத்தில் தம் குருநாதர் வருவதைப் பார்த்ததும், உடனே பல்லக்கில் இருந்து இறங்கி விரைவாக நடந்து வந்து, குருநாதரை வணங்கிப் பணிவோடு ஏதோ பேசினார்.

பி.என். பரசுராமன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi