பிரயாக்ராஜ்: உபி மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சமாஜ்வாடி எம்எல்ஏவாக இருந்தவர் ஜவகர் யாதவ். இவருக்கும் பாஜ முன்னாள் எம்எல்ஏ உதய்பான் கர்வாரியாவுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. கடந்த 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பிரயாக்ராஜ் ரயில் நிலையத்துக்கு சமாஜ்வாடி எம்எல்ஏ ஜவகர் காரில் சென்றார். அப்போது கார் மீது சரமாரியாக ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டதில் ஜவகர் யாதவ் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு பிரயாக்ராஜ் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்தது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் எம்எல்ஏ உதய்பான் கர்வாரியா, அவரது அண்ணன் கபில் முனி கர்வாரியா(முன்னாள் எம்பி), தம்பி சூரஜ்பான் கர்வாரியா(மாஜிஎம்எல்சி) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.
உதய்பான் கர்வாரியா 8 ஆண்டுகள் 9 மாதம் சிறைவாசம் அனுபவித்துள்ள நிலையில், மாநில பாஜ அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அரசியல் சட்டம் 161வது பிரிவின் கீழ் உதய்பான் கர்வாரியாவை முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தரவிட்டுள்ளார். சமாஜ்வாடி எம்எல்ஏவை சுட்டுக்கொன்ற மாஜி பாஜ எம்எல்ஏவை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட்டுள்ளது உ.பி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.