சம்பல்: மின்சாரம் திருட்டு வழக்கில் சமாஜ்வாதி எம்பிக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான் பர்க் மீது மின்சார திருட்டு குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவருக்கு மின்வாரியம் 1.91 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த டிசம்பர் 19ம் தேதி அன்று, அவரது தீபா சராய் இல்லத்தில் மின்சார திருட்டு கண்டறியப்பட்டதாக மின்சாரத் துறை தெரிவித்தது. அவரது வீட்டில் இருந்த மின்மானியில் (மீட்டரில்) குறுக்கீடு செய்யப்பட்டிருந்ததாகவும், 16 கிலோவாட் மின்சாரம் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதனால், மின்சாரத் துறை அவருக்கு 1.91 கோடி அபராதத்தை விதித்து, அவரது மின்சார இணைப்பையும் துண்டித்தது. கடந்த மார்ச் 7ம் தேதி நடந்த இறுதி விசாரணைக்குப் பிறகு, இந்த அபராதத்தை மின்வாரியம் உறுதி செய்தது. ஆனால், எம்பி ஜியா உர் ரஹ்மான் பர்க், நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மின்சாரத் துறையின் ஒருதலைப்பட்சமான செயல்பாட்டை எதிர்த்து சட்டரீதியாகப் போராடுவதாகத் தெரிவித்தார்.