ராம்பூர்: சமாஜ்வாடி முன்னாள் எம்பி அசம்கானின் அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி கட்டிடம், கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்து உபி அரசு கையகப்படுத்தியது.உபியில் கடந்த 2007ம் ஆண்டு சமாஜ்வாடி ஆட்சியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான அசம்கானின் மவுலானா முகமது அலி ஜவகர் அறக்கட்டளைக்கு 41,181 சதுர அடி நிலம் ஆண்டுக்கு ரூ.100 என்கிற கட்டணத்தில் 30 ஆண்டுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த இடத்தில் ராம்பூர் பப்ளிக் பள்ளியும் அதன் அருகிலேயே அசம்கானின் கட்சி அலுவலகமும் செயல்பட்டு வந்தது. பள்ளிக்காக குத்தகை பெறப்பட்ட நிலத்தில் கட்சி அலுவலகம் நடத்தியதால் குத்திகை விதிமுறை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால், நில உரிமையை திரும்ப பெற உத்தரபிரதேச அமைச்சரவை கடந்த மாதம் 31ம் தேதி ஒப்புதல் அளித்தது.அதைத் தொடர்ந்து, ராம்பூரில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான ராம்பூர் பப்ளிக் பள்ளி மற்றும் அதன் அருகில் உள்ள அசம்கானின் கட்சி அலுவலகத்தை காலி செய்ய பூட்டி சீல் வைக்கப்பட்டு,பள்ளி கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.