ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில், மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். உப்பளம் பாதிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் நேற்று வரை விட்டு,விட்டு கனமழையானது வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் அதிகமாக ராமநாதபுரத்தில் 78 மி.மீட்டர், கடலாடியில் 33 மி.மீட்டர், குறைந்தபட்சமாக பாம்பனில் 1.80 மி.மீட்டர், மண்டபத்தில் 8 மி. மீட்டர் மழை என மொத்தம் 256.10 மி.மீ மழை பதிவானது.
நேற்று பகல் 12 மணி நிலவரப்படி மாவட்டம் முழுதும் 185.5 மில்லி மீட்டரும் மழை பதிவானது. இதன் காரணமாக ராமநாதபுரம் பேருந்து நிலையம், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை நீரானது குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்லக்கூடிய நபர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் நோயாளிகளை பார்வையிட வரும் பார்வையாளர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் ஒரு சில பகுதிகளில் தேங்கிய மழை நீரை எடுத்து வரும் நிலையில், பல பகுதிகளில் மழை நீர் அப்புறப்படுத்தாமல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதியில் கனமழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் தற்போது தேர்வு நடந்து வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு வந்தனர். மேலும் தற்போது கோடை காலம் என்பதால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மாவட்டத்தில் தொண்டி, கோப்பேரிமடம், திருப்புல்லாணி, வாலிநோக்கம், மாரியூர் என மாவட்டம் முழுவதும் 5,000 ஏக்கரில் உப்பளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உப்பு உற்பத்திக்காக உப்பள பாத்திகளில் கடல் நீர் பாய்ச்சப்பட்டு உற்பத்திக்காக தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் இரண்டு நாள் பெய்த மழையால் உப்பளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.