நன்றி குங்குமம் டாக்டர்
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பது பழமொழி ஆகும். எந்த ஒரு உணவிற்கும் சுவை கூட்டுவது உப்பு தான். உப்பை போலவே எல்லோரும் அதிகம் பயன்படுத்தக்கூடிய மற்றொரு உணவுப் பொருள் சர்க்கரை ஆகும். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த இரண்டையும் மிக அளவோடுதான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறினால் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அவை என்னவென்று பார்ப்போம்.
உப்பு அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள் :
அதிகப்படியான உப்பு சேர்ப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உடலில் உப்பு அதிகம் சேரும்போது கால்சியம் வெளியேறுகிறது. இதனால் எலும்பின் பலம் பாதிக்கப்படும். அதேபோல உப்பு அதிகமானால் உடலில் தேவையற்ற நீர் தேங்கும். இதனால் உடல் உப்பியதைப் போல காட்சியளிக்கும். கட்டுப்பாடு இல்லாமல் உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு நபருக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 கிராம் அளவுக்கான உப்பு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் உலகில் உள்ள பல மக்கள் அன்றாட தேவையை காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலாக உப்பு சேர்த்து கொள்கின்றனர். நேரடி சமையல் மூலமாகவோ அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மூலமாகவோ நாம் சேர்த்துக் கொள்ளும் உப்பு அளவு அதிகரிக்கிறது.
சர்க்கரை அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள்:
சர்க்கரை ஆற்றலை (கலோரிகளை) வழங்குகிறது. ஆனால் அதில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை. பதப்படுத்தப்பட்ட உணவுகளின் சுவை, நிறம், அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த சர்க்கரைகள் பெரும்பாலும் சேர்க்கப்படுகின்றன.சர்க்கரை வெள்ளை சர்க்கரை, பழுப்பு சர்க்கரை, வெல்லப்பாகு, தேன், மேப்பிள் சிரப் மற்றும் சோள இனிப்புகள் போன்ற பல வடிவங்களில் கிடைக்கிறது
இயற்கையாகவே சர்க்கரை கொண்டிருக்கும் சில உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் போன்றவை ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாகும், ஏனெனில் அவை முக்கியமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன. மற்ற அனைத்து சர்க்கரைகளும் ‘இலவச சர்க்கரை’ என்று அழைக்கப்படுகின்றன.
இலவச சர்க்கரை என்பது உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சர்க்கரைகள் மற்றும் தேன், சிரப்கள், பழச்சாறுகள் மற்றும் ப்யூரிகளில் இயற்கையாக இருக்கும் சர்க்கரையை காட்டிலும் இலவச சர்க்கரைகள் குறைவான ஊட்டச்சத்து மதிப்பை வழங்குகின்றன. இவற்றை அதிகம் உட்கொள்வது இதய நோய், பக்கவாதம், உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, புற்றுநோய் போன்றவற்றை உருவாக்குகிறது. எனவே, நாம் உண்ணும் உணவில் உப்போ, சர்க்கரையோ அளவோடு இருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.