*வேலை செய்யும் பகுதிக்கு படையெடுப்பதால் தொழிலாளர்கள் அச்சம்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் பிடிபடும் பாம்புகளை உப்பளங்கள் அருகே உள்ள புதர்களில் தீயணைப்பு துறை விட்டு செல்கின்றனர். அங்கிருந்து அவை உப்பளங்களுக்கு படையெடுத்து வருவதால் தொழிலாளர்கள் பீதியுடன் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு பெருமை சேர்ப்பதில் உப்புத் தொழிலும் ஒன்று. உப்பளங்களில் பணியாற்றுவது அனைவராலும் செய்ய முடியாத ஒன்றாகும். இங்கு அதிகாலை 5 மணிக்கு முன்பிருந்து பணி தொடங்கும்.
கடந்த சில நாட்களாக தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் உள்ள உப்பளங்களில் பாம்புகள் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக இங்குள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர். மாநகர பகுதிகளில் தீயணைப்பு துறையினரால் பிடிக்கப்படும் பாம்புகள், இங்குள்ள புதர்களில் விடப்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நகர பகுதி குடியிருப்புகளில் பிடிபடும் பாம்புகளை சாக்கு மூட்டைகளில் பிடித்து வரும் தீயணைப்பு துறையினர் அவற்றை வனத்துறையில் ஒப்படைக்காமலும், காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லாமலும் உப்பளங்கள் அருகேயுள்ள சிறிய புதர்களில், குறிப்பாக ஒன்றிய கடல் ஆராய்ச்சி கழகம் அருகேயுள்ள பஸ் நிறுத்தம், கோயில் அருகேயுள்ள உப்பளங்களுக்கு செல்லும் மண் சாலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விட்டு செல்கின்றனர்.
பகலில் பாம்புகளை விட்டு சென்றால் தொழிலாளர்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் இரவு நேரங்களில் மொத்தமாக கொட்டிச் செல்கின்றனர். அவை அருகில் உள்ள உப்பளங்கள், ஷெட்கள், இரவு காவலாளிகளின் குடிசைகள், வாங்கிங் டிராக்குகளுக்குள் சர்வசாதாரணமாக நடமாட துவங்குவதால் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். மேலும் பல தொழிலாளர்கள் அதிகாலைக்கு வேலைக்கு வர முடியாமல் பாம்புகளால் 7 மணிக்கு பிறகே வேலைக்கு செல்ல முடியும் நிலை உள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வீடுகளில் பிடிக்கப்படும் பாம்புகளை முறையாக பெற்றுக்கொள்ள வனத்துறையினர் வருவதில்லை. அதனால், அருகில் உள்ள புதர்களில் விடப்படும் நிலை ஏற்படுகிறது.
இருப்பினும் மலைப் பகுதிகளில் பாம்புகளை விடுவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம், என்றனர். அதிகாலையில் வேலைக்குச் செல்லும் உப்பளத் தொழிலாளர்கள், பாம்புகள் நடமாட்டத்தால் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.