மதுரை: எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கிய உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. கரூரில் உள்ள ஸ்ரீ சதாசிவப் பிரம்மேந்திரரின் ஜீவ சமாதி தினத்தில் வருடம் தோறும் நடத்தக்கூடிய நிகழ்ச்சியில் பக்தர்கள் உணவு அருந்தி எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது வழக்கமாக இருந்தது. இதற்கிடையில் அந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் இடைக்கால தடையும் விதித்திருந்தது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்த தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் வழிபாட்டு முறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறி அதற்கு அனுமதி வழங்கி கடந்த வருடம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவிற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு மனுக்களை கரூர் மாவட்ட ஆட்சியரும், பல்வேறு மனுதாரர்களும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீண்ட விசாரணையில் இருந்து வந்த நிலையில் நீதிபதிகள் விசாரணை செய்து இன்று இறுதி தீர்ப்புக்காக இந்த வழக்கை ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் அங்கப்பிரதட்சணம் என்பது வழிபாட்டு முறையாக இருந்தாலும் பக்தர்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியதாக உள்ளது.
எனவே இதனை அனுமதிக்க முடியாது அதுமட்டுமல்லாமல் இதே போன்ற நிகழ்வு கர்நாடகாவில் உள்ள மாவட்டத்தில் நடந்ததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது. அவ்வாறு உள்ள சூழலில் தனி நீதிபதியின் கருத்து ரத்து செய்யப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கரூர் மாவட்டம் இந்த நிகழ்ச்சிக்கு இனி அனுமதி வழங்க கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.