‘‘கவலையை காட்டிக்காம இருக்கத்தான் கண்டதையும் பேசி சமாளித்திருக்கிறாரு சேலத்துக்காரர்னு இலைக்கட்சியினர் கமெண்ட் கொடுக்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமாா.
‘‘இலைக்கட்சியின் சேலத்துக்காரர் நிலைமை ‘உள்ள அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்’ என்பதாக பரிதாபமாகி இருக்கிறதாம்.. தொடர் தோல்வி, இடைத்தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்டவைகளுக்கு பின்னர் கூட்டணி கட்சித்தலைவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க தூங்கா நகருக்கு வந்த சேலத்துக்காரர் நிருபர்களின் கேள்விகளுக்கு, ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல’ என்ற ரேஞ்சுக்கு கடந்த கால விவரங்களைச் சொல்லி சமாளித்து விட்டு கிளம்பியிருக்கிறாரு.. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்ற வடிவேலு பாணியில் பேசிய சேலத்துக்காரர், ‘இடையில் புகுந்து எதையும் சொதப்பி விடாதீர்கள்’னு உளறல்காரர் துவங்கி தெர்மாகோல் வரை சக மாஜிகளுக்கும் அட்வைஸ் பண்ணிட்டுத்தான் ேபட்டிய ஆரம்பித்தாராம்..
இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஏற்கனவே விமானநிலையத்தில் இலைக்கட்சியின் அப்பாவி தொண்டர் ஒருவர், ‘2026ல் நாம்தான் கவலைப்படாம போங்க..’ என ஏகத்திற்கும் சேலத்துக்காரரை நெருங்கி உசுப்பேற்றி அனுப்பிவைத்தாராம்.. ‘உள்ள அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்’ என்ற ரேஞ்சில் அதே அக்மார்க் புன்னகையைக் காட்டி விட்டு சேலத்துக்காரர் அங்கிருந்து அப்பீட் ஆகி, அதே வேகத்தில்தான் தன் தோல்விகளை வெளிக்காட்டாமல் பேட்டியில் பேசி முடித்தாராம்.. கவலையை காட்டிக்காம இருக்கத்தான் கண்டதையும் பேசிச் சமாளிக்கிறாருன்னு சேலத்துக்காரரின் பேட்டி குறித்து, கட்சியினரில் மற்றவர்கள் காது பட கமெண்ட் கொடுத்தனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சின்ன மம்மி குரலுக்கு இலைக்கட்சியினர் ஆதரவு அளிக்கிறதா பேச்சு அடிபடுகிறதே உங்களுக்கு தெரியுமா…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஜெ. இறப்புக்கு பிறகு இலை கட்சி பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. சேலத்துக்காரர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தாலும், அவர் தலைமையின் கீழ் செயல்படும் இலைக்கட்சி இதுவரை நடந்த தேர்தலில் தோல்வியை மட்டுமே தழுவி வருது.. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது தொண்டர்களை சோர்வை அடைய செய்திருக்கு… சின்ன மம்மி பேட்டி கொடுத்தப்ப இலைக்கட்சி சார்பில் இடைத்தேர்தல்ல போட்டியிட்டிருக்க வேணும்னு கருத்து தெரிவிச்சிருந்தாரு.. அதோட இப்போ இலைக்கட்சியில ஜாதி அரசியல் அதிகமா இருப்பதாக குற்றச்சாட்டையும் தெரிவித்தாரு.. இது உண்மைதான்னு இலைக்கட்சியினர் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிச்சு வர்றாங்களாம்.. கட்சியோட தலைமை பொறுப்பில் இருப்பவரும் சரி, மாவட்ட பொறுப்பில இருப்பவங்களும் சரி, தங்களோட சமுதாயத்தை சேர்ந்தவங்கள மட்டுமே முன்னிலைப்படுத்தி வர்றாங்களாம்..
மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களை எல்லாம் ஓரம்கட்டி வைக்கிறாங்களாம்.. மிஸ்டர் பத்தூர், வெயிலூர், குயின்பேட்டை ஆகிய மாவட்டங்கள்ல ஒருகுறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை மட்டுமே மாஜி அமைச்சர் வைத்துக்கொண்டு பதவிகளை வாரி வழங்கி வருவதா இலைக்கட்சியினர் குற்றஞ்சாட்டி வர்றாங்களாம்.. சாதி அரசியல கைவிட்டு ஜெ. பாணியில கட்சி நிர்வாகிங்களுக்கு பதவிகளை வழங்கி ஊக்குவித்தால் மட்டுமே இருக்கிற இலைங்களாவது தேறும்.. இல்லைன்னா சின்ன மம்மி விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அவருக்கு நேரடியாக இலைக்கட்சியின் முக்கிய மாவட்ட நிர்வாகிகளே ஆதரவு தெரிவிக்க தயாராகி வர்றாங்களாம்.. இதனால இலை கட்சியோட வட்டாரத்துல புயல் வீச தொடங்கியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரர் ஊரிலேயே வலைவீசும் சின்ன மம்மி குரூப் பற்றி சொல்லுங்க பாப்போம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சேலத்துக்காரர் தலைமையில் செயல்படுவது தான், இலைக்கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம்னு தேனிக்காரரும், குக்கர்காரரும் தொடர்ந்து அட்டாக் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. இது போதாதுன்னு பார்லிமென்ட் தேர்தல் முடிவுக்கு பிறகு, அவரை சி.எம். ஆக்கிய சின்ன மம்மியும் இப்போது போர்க்கொடி தூக்கி இருக்காங்க.. மீண்டும் கம்பேக்- ரீ என்ட்ரினு ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து, அவரோட ஆதரவாளர்கள் சின்ன மம்மிக்கு வெல்கம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. நடுவில் தொண்டர்கள் சந்திப்புக்கு கூட்டம் என்றும், சின்ன மம்மி கொம்பு சுத்தினாங்க.. ஆனால், இதில் பெரிய பலன் எதுவும் கிடைக்கலையாம்..
இது ஒருபுறமிருக்க, சேலத்துக்காரரின் சொந்த ஊரில் இருந்து சில முக்கிய நிர்வாகிகளை, சின்ன மம்மியை சந்திக்க வைக்கவும் டிரை பண்ணினாங்களாம்.. இதற்காக சின்ன மம்மியின் ஆதரவாளர்கள், இலை நிர்வாகிகள் சிலரை அப்ரோச் செஞ்சாங்களாம்.. ஆனாலும், யாரும் பிடி கொடுக்கலையாம்.. சேலத்துக்காரரு இவங்களை எல்லாம் ரகசியமாக கண்காணிச்சுக்கிட்டு இருக்கிறதும், இதுக்கு ஒரு காரணமாம்.. இருந்தாலும் சளைக்காமல் வலையை வீசிக்கிட்டே இருக்காங்களாம் சின்ன மம்மியின் ஆதரவாளர்கள்.. கண்டிப்பாக இதற்கு பலன் கிடைக்கும்.. சில நிர்வாகிகள் இன்னும் சிலநாட்களில், சின்ன மம்மியை சந்திப்பார்கள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மோசடி வழக்கில் சிக்கி இருப்பதால் நேரமே சரியில்லைன்னு நெருங்கிய நண்பர்களிடம் புலம்பிய மாஜி அமைச்சர் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் தொகுதியில் இலை கட்சி சார்பில் மாஜி அமைச்சர் தனக்கு வேண்டிய நபரை வேட்பாளராக களத்தில் இறக்கினாரு.. தேர்தல் ரிசல்ட் முதல் நாள் வரை தனது ஆதரவாளரான வேட்பாளர் தொகுதி எம்பியாகி விடுவார் என மாஜி அமைச்சர் கனவில் மிதந்து வந்தாராம்… ஆனால் தேர்தல் முடிவில் வேட்பாளர் படுதோல்வியை சந்தித்துவிட்டார். அதற்கு அப்புறம் கவுரவ பிரச்னையால் கடும் அப்செட்டில் இருந்து வரும் மாஜி அமைச்சர் பொதுஇடங்களில் கூட தலைகாட்டவில்லை.. இதற்கிடையில் டெக்ஸ்டைல் மாவட்டத்தில் மோசடி வழக்கு ஒன்று விஸ்வரூபம் தற்போது எடுத்துள்ள நிலையில் மாஜியானவர் நமக்கு நேரமே சரியில்லைன்னு அவரது நெருங்கிய நண்பர்களிடம் கூறி புலம்பியிருக்கிறாரு.. தற்போது மாஜியானவர் எங்கு இருக்கிறார் என்பது நெருங்கிய ஆதரவாளர்களுக்கு கூட தெரியாமல் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ளதாம்.. முக்கிய நிர்வாகிகளுக்கு கூட மாஜியானவர் இருக்கும் இடம் தெரியவில்லையாம்… வழக்குக்கு பயந்து மாஜியானவர் தலைமறைவாக கூட இருக்கலாம்னு நிர்வாகிகளுக்குள் கிண்டல் அடிக்கிறாங்க.. தற்போது, டெக்ஸ்டைல் மாவட்டத்தில் இந்த டாப்பிக் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..’’ என முடித்தார் விக்கியானந்தா.