சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் 78 ரயில்வே ஸ்டேஷன்களிலும் க்யூஆர் கோடு மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்து டிக்கெட் பெறும் வசதி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் வணிகம் நடக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரயில்வேத்துறையில் டிக்கெட் கட்டணத்தை டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதியை பயணிகளுக்கு அறிமுகம் செய்து வருகிறது. கோட்டம் வாரியாக இதனை படிப்படியாக ரயில்வே நிர்வாகம் செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இந்தவகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில், ரயில் டிக்கெட் வழங்குவதில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர்.
சேலம் கோட்டத்தில் உள்ள சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், சேலம் டவுன், மேட்டூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, ஆத்தூர் என 78 ரயில்வே ஸ்டேஷன்களிலும் இருக்கும் டிக்கெட் கவுன்டர்களில் க்யூஆர் கோடுடன் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சாதனங்களை நிறுவியுள்ளனர். இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து ஆன்லைனில் பணம் செலுத்தி, முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் என அனைத்துவித டிக்கெட்களையும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பயணிகள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பணமில்லா பரிவர்த்தனைகளை எளிதாக்குவதன் மூலம், பயணிகள் சிரமமின்றி டிக்கெட்டுகளை பெற முடிகிறது. அனைத்து டிக்கெட் கவுன்டர்களிலும் க்யூஆர் கோடு சாதனங்கள் நிறுவப்பட்டதன் மூலம், பயணிகள் டிக்கெட்டுகளை தாமதமின்றி விரைவாக பெறலாம்.
சில்லரை இல்லை என்ற பிரச்னை வராது. பணத்துடன் வந்து வரிசையில் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த க்யூஆர் குறியீட்டில் பிஎச்ஐஎம், பேடிஎம், ஜிபே, போன் பே, பாங்க் வாலட்ஸ் போன்ற பல டிஜிட்டல் கட்டண தளங்களை பயன்படுத்த இயலும். இது அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற பரிவர்த்தனை அனுபவத்தை உறுதி செய்கிறது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள 78 ரயில்வே ஸ்டேஷன்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் டிக்கெட் பெற க்யூஆர் கோடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவும், அனைத்து டிக்கெட் கவுன்டர்களிலும் இவ்வசதி உள்ளது. இது பயணிகளுக்கான சேவைகளை நவீனப்படுத்தவும், மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்’’ என்றனர்.