Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சேலத்தில் ரூ.100 கோடியுடன் தலைமறைவானவர் புதுச்சேரியில் பதுங்கியிருந்த நகை கடை உரிமையாளர் கைது

சேலம்: சேலத்தில் நகைக்கடை நடத்தி வந்து ரூ.100 கோடி பணத்துடன் தலைமறைவான உரிமையாளரை தேடி வந்த நிலையில் புதுச்சேரியில் பதுங்கியிருந்தவரை தர்மபுரி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் வீராணம் வலசையூரை சேர்ந்தவர் சபரிசங்கர் (35). இவர் சேலம், தர்மபுரி, நாமக்கல், ஆத்தூர், திருச்சி உள்பட 11 இடங்களில் எஸ்.வி.எஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வந்தார். இதில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்ததால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு நகை, பணத்துடன் தலைமறைவாகி விட்டார். சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். பின்னர் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததால் அந்தந்த மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்ய சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி சேலம், தர்மபுரியில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சபரிசங்கர் மீது தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

500க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ள நிலையில், 15 புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சுமார் ரூ.3.75 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான சபரிசங்கரை தேடி வந்தனர். இதற்கிடையில் சபரிசங்கர், புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்கு வீடு வாடகைக்கு எடுத்து தனியாக பதுங்கியிருந்த சபரிசங்கரை நேற்று அதிரடியாக கைது செய்து தர்மபுரிக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர். மோசடி செய்த பணத்தை பதுக்கி வைத்துள்ளாரா? அல்லது நிலமாக வாங்கி குவித்துள்ளாரா? என விசாரணை நடந்து வருகிறது.