Monday, February 26, 2024
Home » தனிநிறுவனம் தொடங்கி ஊழல் செய்த புகாரில் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது: வன்கொடுமை சட்டப்பிரிவிலும் வழக்கு பாய்ந்தது

தனிநிறுவனம் தொடங்கி ஊழல் செய்த புகாரில் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது: வன்கொடுமை சட்டப்பிரிவிலும் வழக்கு பாய்ந்தது

by Ranjith

சேலம்: பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டே தனியார் நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழக நிதியில் முறைகேடு செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர், கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்றார். பல்கலைக்கழகத்தில் பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

குறிப்பாக, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு காவி வண்ண ஒளி விளக்குகளை ஒளிரவிட்டதுடன், மதம் சார்ந்த நிகழ்ச்சி நடத்த பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து, அடுத்தடுத்து மாநில அரசின் கொள்கைகளுக்கும், தொழிலாளர்கள் மற்றும் மாணவர் நலனுக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இதழியல் துறை பேராசிரியர் சுப்பிரமணி என்பவர், பெரியாரின் போராட்டங்கள் குறித்து, `பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகத்தை எழுதியதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியது சர்ச்சையானது. அதேபோல், ஜி20 மாநாடு வெற்றிக் கூட்டம் என்ற பெயரில், ஒன்றிய அரசின் சாதனை விளக்க கூட்டம் ஒன்றையும் பல்கலைக்கழகத்தில் நடத்தினர்.

இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இயக்குநர்களாக கொண்ட, பூட்டர் பவுண்டேசன் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்க, சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. இந்நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுத்துப்படுவதுடன், பல்கலைக்கழக வளங்களை அவர்களுக்கு தாரைவார்ப்பதாக சர்ச்சை எழுந்தது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே, துணைவேந்தர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பல்கலைக்கழக சாசன விதிகளுக்கும், அரசு விதிகளுக்கும் எதிரானது என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னாள் பேராசிரியருமான இளங்கோவன் (73) என்பவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில், ‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் சரிவர இயங்கவில்லை. சிண்டிகேட் அனுமதியில்லாமல், துணைவேந்தர் சமீபத்தில் தொடங்கிய நிறுவனத்தில், பெரியார் பல்கலைக்கழக நிதியை முதலீடு செய்துள்ளார். இதனால், பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சாதி ரீதியாகவும், ஆபாசமாகவும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகனுக்கு, கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோன்மணி, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை, கருப்பூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் துணைவேந்தர் மீது பணமோசடி, ஆபாசமாக பேசுதல், சாதி பெயரைக்கூறி திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ெசய்யப்பட்டு, நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார். முறைகேடு புகார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அதிமுக பின்புலத்தில் பதவி
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் குழந்தைவேலுவின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பொறுப்பை பெற பல்வேறு தரப்பினரும், பலத்த முயற்சி மேற்கொண்டனர். இதில், ஜெகநாதனுக்கு துணைவேந்தராகும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு அதிமுக பின்புலம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக துணைவேந்தர் பதவியை பெற கடும் போட்டி இருந்தபோதிலும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினரான ஜெகநாதனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

one + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi