சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வெள்ளார் கிராமத்தில் பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வெள்ளார் கிராமம், அரசமரத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (வயது 55) த/பெ.ராமசாமி என்பவர் இன்று காலை (13.3.2025) வெள்ளார் பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் எருமப்பட்டி, காட்டுவளவு என்ற இடத்தில் புதிதாக வேலை நடைபெற்று வரும் தண்ணீர் தொட்டியின்மீது ஏறி பணி செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சுப்ரமணி குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.