மலைகள் சூழ்ந்த சேலம் மாவட்டத்தில் பசுமை பொதிந்து கிடக்கும் எழில்மிக்க பகுதி பனமரத்துப்பட்டி. நெல், கரும்பு, தென்னை சாகுபடி இங்கு பிரதானமாக இருந்தாலும் மலர் சாகுபடியும் அதிகளவில் செய்யப்படுகிறது. அரளி, செவ்வந்தி, கோழிக்கொண்டை, சம்பங்கி, சாமந்தி என்று சுற்றுப்புறப் பகுதிகளில் எல்லாம் மலர் சாகுபடியே மணமணக்கிறது. இந்த வகையில் நந்தியாவட்டம் சாகுபடி தனக்கு பெரும் நம்பிக்கையைத் தந்துவாழவைத்துக் கொண்டிருக்கிறது என்று நெகிழ்கிறார் 74 வயது மூத்த விவசாயி சுப்ரமணியம்.தலைமுறைகள் கடந்து விவசாயம் செய்து வரும் இவர், தனது மகனையும், மகளையும் விவசாயிகளாகவே உருவாக்கி இருக்கிறார். இந்த நாட்டில் உறவுகள் கைவிட்டாலும் கலங்காமல் வாழும் மனஉறுதி படைத்தவர்கள், நிலத்ைத நம்பி உழைக்கும் விவசாயிகள் மட்டும்தான் என்று ஆணித்தரமாக சொல்கிறார் சுப்ரமணியம். அவரைச் சந்தித்தபோதும் மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘‘பனமரத்துப்பட்டி காளியாகோயில் புதூரில் ஆறரை ஏக்கர் நிலத்தில் எனது முன்னோர்கள் விவசாயம் செய்தனர். அவர்கள் வழியில் எனது பத்தாவது வயதிலேயே விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். திருமணமான பிறகு மனைவியும் என்னுடன் விவசாயத்தில் இணைந்து கொண்டார். மகனும், மகளும் பிறந்த பிறகு அவர்களை பள்ளிக்கல்வி வரை படிக்க வைத்தேன். அவர்களின் நாட்டமும் விவசாயத்தின் மீதே இருந்தது. இதனால் 4 ஏக்கர் நிலத்தை மகனுக்கும், 2 ஏக்கர் நிலத்தை மகளுக்கும் ஒதுக்கிக் கொடுத்து விவசாயம் செய்வதற்கு ஊக்கம் அளித்தேன். அவர்கள் நல்ல முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். மீதமுள்ள அரை ஏக்கர் நிலத்தில் எனது விவசாயப் பணிகள் தொடர்கிறது.
எனது அனுபவத்தில் விவசாயம் என்பது பல்வேறு காலகட்டங்களில் ஏற்றமும், இறக்கமும் நிறைந்த ஒரு தொழிலாகவே இருந்துள்ளது. குறிப்பாக சில நேரங்களில் இளநீருக்கு அதிகவிலை கிடைக்கும். பல நேரங்களில் தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கும். இதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு சாகுபடி செய்தால், நமக்கு வரும் நஷ்டத்தைக் கட்டுப்படுத்தலாம். முக்கியமாக ஒரு பயிரை சாகுபடி செய்தால், அதற்கிடையில் ஊடுபயிராக மற்றொன்றை சாகுபடி செய்ய முடியுமா? என்று யோசித்து அதற்கேற்ற வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
இந்த வகையில் இப்போது நான் நந்தியாவட்டம் சாகுபடி செய்துள்ளேன். நந்தியாவட்டத்தைப் பொறுத்தவரை செடிகள் ஊன்றி வளர்க்க வேண்டிய மலர் ரகமாகும். ஒரு ஏக்கர் நிலத்தில் நான்கு, ஐந்து முறை டிராக்டர் கொண்டு நன்றாக உழவு செய்வோம். பின்னர் ஏக்கருக்கு 1 டிராக்டர் தொழுவுரம் இடுவோம். நந்தியாவட்டத்தைப் பொறுத்தவரை ஆறடிக்கு ஆறடி என்ற அளவில் இடைவெளி விட்டு 300 செடிகள் வரை நட்டு வளர்க்கலாம். ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலம், ஒரு அடி உயரம் கொண்ட குழிக்குள் செடிகளை நடுவோம். நட்டவுடன் உயிர்ப்பாசனம் இடுவோம். பின்னர் வாரம் ஒருமுறை பாசனம் செய்வோம். நந்தியாவட்டத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆனால் அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதற்காக சொட்டுநீர்ப் பாசனத்தை பயன்படுத்தலாம்.
இயல்பாகவே நந்தியாவட்டத்தில் பூச்சிகளின் தாக்குதல் சற்று குறைவாகவே இருக்கும். இதனால் மருந்துகள் அடிக்கத் தேவையில்லை. இருந்தபோதும் வேளாண்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளின்படி பூச்சி மருந்துகள் தெளிப்போம். மாதத்திற்கு ஒரு முறை உயிர் உரங்களை எருவில் கலந்து வைத்தால் போதும். 6 மாதத்தில் மரப்பயிர் போல் செடி வளரும். முதலில் குறைவான மகசூலே கிடைக்கும். அதாவது செடிக்கு 100 கிராம் என்ற அளவில் மட்டுமே பூக்கள் கிடைக்கும். மாதங்கள் செல்லச் செல்ல அதிகளவில் பூக்கள் கிடைக்கும். இப்படி நாம் நட்டு வளர்க்கும் செடிகள், தொடர்ந்து 10 ஆண்டுகள் நமக்கு பலன் தரும். செடிகளைப் பொறுத்தவரையில் 6.5 அடியில் இருந்து 8 அடிக்கு மேல் வளராதவாறு கிளைகளை ஒடித்து விட வேண்டும். அப்போதுதான் பக்கக் கிளைகள் அதிகமாக தோன்றும். தண்ணீர் அதிகம் பாய்ச்சினாலும், மழை இருந்தாலும் செடிகள் வேகமாக வளரும். அதேபோல் பூவை எடுக்கும்போது பச்சை காம்புகளுடன் ஒடித்து எடுக்க வேண்டும்.
இப்படி ஒடிக்கும்போது பால் வரும். அந்தப்பால் கையில் ஒட்டிக்கொண்டால் சிலருக்கு புண் வரும். எனவே கையுறை அணிந்து பூக்களைப் பறிப்பது நல்லது.மணமேடைகளை அலங்கரிக்கும் பூவாக நந்தியாவட்டம் இருப்பதால் இதற்கு எப்போதும் மவுசு உண்டு. இந்தப்பூவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் வண்ணங்கள் தடவி வியாபாரிகள் விற்கின்றனர். இதேபோல் மல்லிகைக்கு மாற்றாக நந்தியாவட்டத்தை வாங்கிச் செல்வோரும் அதிகளவில் உள்ளனர். எங்களின் தோட்டத்திற்கே வியாபாரிகள் நேரில் வந்து வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் பூக்களை வாங்கிச்செல்கின்றனர். நந்தியாவட்ட பூக்கள் சாதாரண நாட்களில் கிலோ ₹40 முதல் முதல் ₹200 வரையில் விலை வைத்து விற்கப்படுகிறது. முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் இன்னும் கூடுதலான விலை கிடைக்கும். ஒருநாளைக்கு குறைந்தது 8 கிலோ முதல் 12 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். இதில் சராசரியாக கிலோவுக்கு ரூ.70 விலை கிடைக்கிறது. அதேபோல் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 8 கிலோ பூக்கள் கிடைத்தாலும் தினசரி வருவாயாக ரூ.560 கிடைக்கிறது. மாதத்திற்கு ரூ.16800 வருமானமாக கிடைக்கிறது. இதில் ரூ.8 ஆயிரம் செலவு போக ரூ.8800 லாபமாக கிடைக்கிறது. இப்படி மவுசு மிக்க நந்தியாவட்டத் தோட்டத்தில் தென்னை மரங்களையும் நட்டு சாகுபடி செய்கிறோம். தென்னையை 25*25 அடி இடைவெளியில் நடவு செய்திருக்கிறோம். நடவு செய்து ஓராண்டு ஆகிறது. வருங்காலத்தில் இதன்மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும். இதுபோன்ற செயல்களால் வருவாயை தக்கவைத்துக் கொள்கிறேன்.
இதுபோக 50 சென்ட் நிலத்தில் அரளிச்செடிகளை சாகுபடி செய்திருக்கிறேன். இதில் 170 செடிகள் உள்ளன. இந்த செடிகளை கான்ட்ராக்ட் முறையில் விட்டுவிட்டேன். அவர்கள் வந்து பூக்களை பறித்து சென்று விற்பனை செய்துவிடுகிறார்கள். அவர்கள் ஒரு செடிக்கு மாதந்தோறும் ரூ.300 தருகிறார்கள். இதன்மூலம் மாதத்திற்கு ரூ.51 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இவை அனைத்திற்கும் மேலாக இங்கே ஒரு கருத்தை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். தற்போது நான் 70 வயதை கடந்திருக்கிறேன். இன்றைய சூழலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், உடல் உழைப்பு திறன் குறைந்தவர்கள் என்று பலர் உறவுகளால் நிர்க்கதியாக விடப்படுவதை கண்கூடாக பார்க்கிறேன். ஆனால் விவசாயம் என்பது ஓய்வில்லாத ஒரு அற்புத தொழில். இன்றளவும் விவசாயிகளாக வாழும் யாரும் இதுபோன்ற நிர்க்கதிக்கு அதிகம் ஆளாவதில்லை. காரணம் நாங்கள் மண்ணை நம்பி உழைக்கிறோம். உறவுகள் எங்களை கைவிட்டாலும், இந்த மண் எங்களை கைவிடுவதில்லை. இந்த மகிழ்ச்சியோடு வாழ்க்கைப் பயணம் தொடர்வது இனிமையானது’’ என்று பெருமிதத்துடன் நிறைவு செய்கிறார் சுப்ரமணியம்.
தொடர்புக்கு:
சுப்ரமணியம்: 94426 97878
பூஜைக்குரிய மலர்!
வெண்ணிறத்துடன் மணமணக்கும் நந்தியாவட்டம் பூஜைக்குரிய மலராகவும் உள்ளது. இதனால் கோயில்கள், நந்தவனங்கள், வீட்டுத்தோட்டங்களிலும் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. நந்தியாவட்டம் என்பது ஒரு மலராக மட்டுமல்லாமல் மருத்துவ மூலிகை செடியாகவும் பயன்படுகிறது. கண் எரிச்சல், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், தோல் நோய்களுக்கும் சிறந்த தீர்வை அளிக்கிறது. இதேபோல் வயிற்றுப்புழு கொல்லியாகவும் நந்தியாவட்டம் திகழ்கிறது. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 99 மலர்களில் நந்திமலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுதான் ‘நந்தியாவட்டம்’ என்கின்றனர் வேளாண் சார்ந்த வரலாற்று ஆர்வலர்கள்.