சென்னை: போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சியில் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், தென் தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழ்ந்திடும் மதுரை மாநகரில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு, இதுவரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருச்சியில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவைப் பரவலாக்கிடும் முயற்சிகளின் அடுத்த கட்டமாக, சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் பொதுமக்கள், போட்டித் தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக தலா ஒரு இலட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூட வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.