சேலம்: சேலத்தில் நடைபெற்றுவரும் அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் திடீரென பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நெல்லை, குமரி, கும்பகோணம், மதுரை, திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கோஷ்டி மோதல் காரணமாக ஒருவருக்கு ஒருவர் தகராறு, அடிதடியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கள ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட குழுவினர் தம்மிடம் அறிக்கை அளிக்கும் என எடப்பாடி அறிவித்திருந்தார்.
இதனிடையே சேலத்தில் கடந்த செவ்வாய்கிழமை (26ம்தேதி) களஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே கள ஆய்வு கூட்டம் இன்றைக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியே சேலம் கள ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார். அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் செய்தியாளர்கள் முழுநேரம் அனுமதிக்கப்பட்ட நிலையில் சேலத்தில் 5 நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள ஆய்வில் நடந்த மோதல் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சொந்த மாவட்டத்தில் நடைபெறும் கள ஆய்வில் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.