சேலம் : சேலம் அருகே மின்சாரம் பாய்ச்சி மகனை கொலை செய்ய வைத்த மின்பொறியில் சிக்கி தந்தையே பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தொளசம்பட்டி மானாத்தாள் நாடார் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58), கூலிதொழிலாளி. இவரது மனைவி சிவகாமி பிரிந்து சென்றதால், தனியாக வசித்து வந்தார். அந்த வீட்டிற்கு பின்புறம் உள்ள மற்றொரு வீட்டில் ராஜேந்திரனின் மகன் அழகேசன் (34), தனது மகன் பிரவீன்குமாருடன் (12) தனியாக வசித்து வருகிறார்.
ராஜேந்திரன் தினமும் இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு வந்து மகன் அழகேசனிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 17ம் தேதி இரவு 9 மணிக்கு போதையில் வீட்டிற்கு வந்த ராஜேந்திரன், மகன் அழகேசனிடம் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு நள்ளிரவு வரை நீடித்துள்ளது. இதனை பார்த்த ராஜேந்திரனின் தாய் பாவாயி, இருவரிடமும் சண்டை போடாமல் தூங்குங்கள் எனக்கூறிவிட்டு தன் வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார்.
மூதாட்டி பாவாயி, காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டு முன்பு ராஜேந்திரன் உடல் அசைவற்று கிடந்துள்ளார். அவர் மீது இரும்பு கட்டுக்கம்பியும், மின்சார ஒயரும் இருந்தது. அந்த நேரத்தில் மற்றொரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அழகேசன் எழுந்து வெளியே வந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, இரவில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ராஜேந்திரன், தன் மகன் அழகேசனை கொலை செய்ய தனது வீட்டில் இருந்து ஒயரில் மின்சாரத்தை எடுத்துவந்து கட்டுக்கம்பி மூலம் அழகேசனின் பைக்கில் மாட்டி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ராஜேந்திரன் இறந்திருப்பது தெரியவந்தது.இதுபற்றி இறந்த ரஜேந்திரனின் தாய் பாவாயி, தொளசம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
எஸ்ஐ காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ராஜேந்திரன் வீட்டின் பிளக் பாயிண்டில் இருந்து மின்சாரத்தை எடுத்து வந்து மகனை கொல்ல பைக்கில் பொறி வைத்திருப்பது தெரிந்தது. ஆனால், அந்த மின்பொறியில் சிக்கி அவரே உயிரிழந்துள்ளார் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகனை கொல்ல போதையில் மின் பொறி வைத்த தந்தை, அதே பொறியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.