சேலம்: சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு கடந்த 20ம்தேதி இரவு 8 மணியளவில் திருநங்கைகள் சிலர் ஆட்டோவில் வந்தனர். பின்னர் அவர்கள் தட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். அவர்கள், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் அமரும் அறைகள் என ஒவ்வொரு அறையாக சென்று பூஜை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.
போலீஸ் நிலையத்திற்குள் திருநங்கைகளை அழைத்து வந்து பூஜை செய்த விவகாரம், மாநகர போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. அதாவது, அழகாபுரம் போலீஸ் நிலைய எல்லையில் கொலை, கொள்ளை வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், தேடப்படும் குற்றவாளிகள் விரைவில் பிடிபட வேண்டியும் திருநங்கைகளை அழைத்து வந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.