சேலம்: தொலைதூரக் கல்வி திட்டத்தில் போலியாக ஆசிரியர்களை கணக்கு காட்டி மாநில குழுவை ஏமாற்றியதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி திட்டத்தில்பல்வேறு முறைகேடுகள் நடந்ததையும், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அந்த பிரிவு செயல்பட்டு வந்ததையும் ஏற்கனவே பல்கலைக்கழக மாநில குழு கண்டறிந்தது. இதனால் 2 ஆண்டுகளாக அந்த பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக கூறி தொலைதூரக் கல்வி திட்டத்தை மீண்டும் தொடங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மாநில குழு விரைவில் ஆய்வு நடத்த உள்ளது.
இந்நிலையில், அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொலைதூரக் கல்வி திட்டத்தில் போலியான ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்கலைக்கழகத்தின் பணியாற்றும் ஆசிரியர்களின் பெயர்களையும், தகுதியே இல்லாதவர்கள் பலரின் பெயரையும் தொலைதூரக் கல்விக்கான ஆசிரியர்களாக பட்டியலிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்றும், போலியான பட்டியலை காட்டி தொலைதூர கல்விக்கு அனுமதி பெறுவதற்காக மானியக் குழுவை ஏமாற்ற முயற்சி நடந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.