சேலம்: தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டு நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்தார். இதையடுத்து சிலையின் கீழே அமைக்கப்பட்டு இருந்த மேடையில், சமூக நீதி நாள் உறுதிமொழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசிக்க அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.