*நீச்சல் பழகியபோது மூழ்கி உயிரிழப்பு
சேலம் : சேலம் அருகே மாயமான பள்ளி மாணவனை போலீசார் தேடி வந்தநிலையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டான். நீச்சல் பழகிய போது மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் அருகேயுள்ள நிலவாரப்பட்டி மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி.
இவரது மகன் நிஷாந்த் (8), அரசுப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த், திடீரென அங்கிருந்து மாயமானான். இதனால், அதிர்ச்சியடைந்த சக்திவேல் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால், சிறுவன் நிஷாந்தை காணவில்லை.
இதுகுறித்து மல்லூர் போலீசில் சக்திவேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜிரமணன் தலைமையிலான போலீசார் சிறுவன் மாயம் என வழக்குப்பதிவு செய்து, தேடி வந்தனர்.
இதனிடையே சக்திவேலின் வீட்டின் அருகே திறந்தவெளி கிணறுகள் உள்ளன.
இதனால் சிறுவன் நிஷாந்த், அதில் ஏதேனும் ஒரு கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை முதல் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், அப்பகுதியில் உள்ள 5 கிணறுகளில் தேடினர். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை.
நேற்று மதியம், சக்திவேலின் வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள தனபால் என்பவரது விவசாய கிணற்றில் சிறுவன் நிஷாந்த் சடலமாக மிதந்தான். அந்த கிணற்றில் 5 லிட்டர் குடிநீர் கேனும் மிதந்தது. இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியழுதனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சிறுவன் நிஷாந்தின் சடலத்தை மீட்டனர். போலீசார், சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன் நிஷாந்த், உடலில் கேனை கட்டிக்கொண்டு நீச்சல் பழக கிணற்றில் இறங்கியிருக்கலாம் என்றும், அப்போது கயிறு அவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவனுடன் வேறு யாரேனும் குளிக்க சென்றார்களா? என்ற கோணத்திலும், அவன் எவ்வாறு உயிரிழந்தான் என்பது பற்றியும் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாயமான சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.