சேலம்: ஈரோடு மாவட்டம் பவானி குறிச்சியை சேர்ந்தவர் முத்துநகை (33). குமாரபாளையத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தபோது மணிகண்டன் என்பவரை காதலித்தார். இருவரும் வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 7 ஆண்டு காதலுக்கு பிறகு கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர். முத்துநகை, சேலம் பள்ளப்பட்டியில் உள்ள விடுதியில் வார்டனாக வேலை செய்து வந்தார்.
மணிகண்டன், ஈரோட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி தங்கியிருந்த விடுதியில் முத்துநகை தூக்கில் தொங்கினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், உதவி கமிஷனர் நிலவழகன், உதவி கலெக்டர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.