சேலம்: சேலம் தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், சேலம் வட்டம், குப்பனூர் கிராமம், வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று (4-9-2024) காலை 10.00 மணியளவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் (வயது 55) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் சேலம் வட்டம், சின்னனூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) மற்றும் சிவகாசியை சேர்ந்த முத்துராஜா (வயது 47) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த ஜெயராமன் என்பவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும், காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.