கிருஷ்ணகிரி: கிகிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ராயல் மருத்துவமனை என்ற பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை துவங்கப்பட்டது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 4 டாக்டர்கள் சேர்ந்து இந்த மருத்துவமனையை துவங்கினர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த மருத்துவமனைக்கு சென்ற நோயாளி ஒருவருக்கு டாக்டர் எழுதி கொடுத்த மருந்து வாங்க, அங்குள்ள மருந்து கடைக்கு சென்று மருந்தை வாங்கியுள்ளார். அதில், எம்ஆர்பி ரூ.9 என்ற மருந்தை பில்லில், 14 மடங்கு உயர்த்தி ரூ.126 என போடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்,
இது குறித்து கேட்ட போது மீதி தொகையினை திருப்பி வழங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த மருந்தை வாங்கிய போது, அதே போல் 14 மடங்கு உயர்த்தி வசூல் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டதுடன், இது குறித்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டார். இந்த சம்பவம் நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, கலெக்டர் சரயுவிடம் கேட்ட போது, ‘இந்த புகார் குறித்து விசாரணை நடத்த நலப்பணிகள் இணை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை வரப்பெற்ற பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.