திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை 22 கிமீ தூரம் உள்ளது. இந்த சாலையை செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. இதில், ஆமூர், சிறுதாவூர், முந்திரித்தோப்பு, வேலங்காடு, பொருந்தவாக்கம், அகரம், மானாம்பதி, ஆண்டிக்குப்பம், ஆனந்தபுரம், எச்சூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் வனத்துறை தடை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக புதிய சாலை போடப்படவில்லை. இதனாலும் அதிக வாகன போக்குவரத்து காரணமாகவும் திருப்போரூரில் இருந்து மானாம்பதி வரையுள்ள 10 கிமீ தூர சாலையில் மரணபள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருப்போரூரில் இருந்து சிறுதாவூர் மற்றும் ஆமூர் வரை 6 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பள்ளம் காணப்படுகிறது.
பல்வேறு கிராமங்களை சேர்ந்த பலர் சென்னை செல்ல மானாம்பதி வழியாக திருப்போரூர் வந்து அங்கிருந்து மாநகர பேருந்து மூலம் பயணிக்கின்றனர். இவர்கள் ஆட்டோ, பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வரும்போது சாலை பள்ளங்களில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இரவு நேரங்களில் சாலை பள்ளங்களில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். இதுமட்டுமின்றி திருப்போரூரில் இருந்து சிறுதாவூர் வரையுள்ள வனப்பகுதியில் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இவை வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கின்றன. சிறுதாவூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுநலன் கருதி அவ்வப்போது உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் மண்கொட்டப்பட்டாலும் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.
திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி இந்த சாலை உள்ளிட்ட திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளுக்கு ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலைப்பணிகளுக்கு இன்னும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை. எனவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மேற்கண்ட சாலையின் ஒரு பகுதியான திருப்போரூர்-திருக்கழுக்குன்றம் இடையே புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.