சைவம், வைணவம் தொடர்பான பேச்சு பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை: காவல்துறை பதில்தர நீதிபதி உத்தரவு
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன் வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு டிஜிபி மற்றும் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு விசார்ணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


