சென்னை: மும்பையில் உள்ள வாடா என்னும் இடத்தில் அமைந்துள்ள ஜெ.குமார் இன்ப்ரா பிராஜெக்ட்ஸ் என்ற தொழிற்பட்டறையில் தயாரிக்கப்பட்டு வரும், சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, நான்கு வழித்தட உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு, இரும்பு தூண்கள், தூலகங்கள் அதன் தரம் மற்றும் அளவுகள் ஆகியவற்றை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ. தூரத்திற்கு, 15 மீ. அகலத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்க ரூ.621 கோடி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு கடந்தாண்டு ஜனவரி 19ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார்.
இதன் முக்கிய அம்சங்களான, உயர்மட்ட சாலை மேம்பாலம், மெட்ரோ ரயில் சுரங்கபாதை உள்ள இடங்களில் 2 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் 7 முக்கிய சாலைச் சந்திப்புகளை கடக்கும் வண்ணம் இந்த உயர்மட்டச் சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காலங்களில் பயண நேரம் 30 முதல் 35 நிமிடம் ஆகிறது. இந்த உயர்மட்டப் பாலம் அமைக்கப்படுவதால் பயண நேரம் 3 நிமிடமாக குறையும்.
எனவே, சைதாபேட்டை முதல் தேனாம்பேட்டை வரை அமைக்கப்படும் உயர்மட்டப் பாலத்திற்கு பயன்படுத்தப்படவுள்ள இரும்பு தூண்கள் தயாரிக்கப்படும் மும்பை, வாடாவில் உள்ள ஜெ.குமார் இன்ப்ரா பிராஜெக்ட்ஸ் என்ற தொழிற்பட்டறையில் தயாரிக்கப்பட்டு வரும் இரும்பு தூண்கள், தூலகங்கள், அதன் தரம் மற்றும் அளவுகளை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின்போது, தலைமைப் பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சத்தியபிரகாஷ், சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.