Saturday, December 9, 2023
Home » சகலங்களையும் தந்தருளும் சரஸ்வதி

சகலங்களையும் தந்தருளும் சரஸ்வதி

by Kalaivani Saravanan

கூத்தனூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் உள்ளது கூத்தனூர் சரஸ்வதி ஆலயம். ஒட்டக்கூத்தர் வழிபட்ட தலம். இவ்வூருக்கு பூந்தோட்டம் என்ற பெயரும் உள்ளது. சரஸ்வதிக்கென்றே தனிக்கோயில் உள்ளது.

மதுரை: ஸ்ரீமதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் ஸ்ரீமஹாலட்சுமிக்கும் தனி சந்நதிகள் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலின் தூண் ஒன்றில் இருகைகள் மட்டுமே உடைய சரஸ்வதியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தேவி தன் இடக்காலை ஊன்றி வலக்காலை முன்வைத்த நிலையில் வீணை வாசிக்கும் தோற்றத்தில் நின்ற திருக்கோலத்தில் வலது தோளில் கிளியுடன் விளங்குகிறாள். மதுரையில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ‘சிந்தா தேவி’ (சரஸ்வதி) என்னும் அம்மன் கோயில் ஒன்று இருந்ததாக மணிமேகலையினால் தெரிய வருகின்றது. இந்தக் கோயிலைப் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருதுகின்றார்கள்.

பத்மநாபபுரம்: கம்பர் தமிழ் நாட்டிலிருந்து தென்பகுதிக்கு வந்தபோதுதான் வணங்கிய சரஸ்வதி தேவியின் திருவுருவையும் தன்னுடன் எடுத்து வந்து விட்டார். அச்சிலையே இன்று பத்பநாபபுரம் கோட்டையின் உள்ளே நிறுவப்பட்டுள்ளது. பத்மாசனத்தில் காட்சி தரும் இப்பெருமாட்டி நவராத்திரி உற்சவத்தின் போது திருவனந்தபுரம் எழுந்தருளுகிறார். அவ்வாறு எழுந்தருளி வரும் போது அன்னையை தமிழக கேரள எல்லையில் இரு மாகாண மக்களும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

வேதாரண்யம்: திருமறைக்காடு என்றழைக்கப்படும் வேதாரண்யத்தில் சரஸ்வதி தேவி கலைகளின் வடிவாய் நின்று வழிபட்டதால் இங்கு அமைந்துள்ள சரஸ்வதி ‘வேத சரஸ்வதி’ என்று போற்றப்படுகிறாள்.

திருநெய்த்தானம்: ஸ்ரீருதயபுரீஸ்வரரை சரஸ்வதி பூஜித்த பேறு பெற்ற தலம் இது. இது திருவையாறு சப்ததானத்தலங்களில் ஒன்றாகும். இங்கும் சரஸ்வதி தீர்த்தம் உள்ளது.

கைலாசநாதர் கோயில்: பல்லவர் காலத்தில் ராஜசிம்ம பல்லவனால் எழுப்பப்பட்ட ஆலயம் கைலாச நாதர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் 3 இடங்களில் சரஸ்வதியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இதில் இரு சிற்பங்களில் 4 திருக்கரங்களும் அதில் வலக் கரங்களில் அட்சமாலையும் தியான முத்திரையும் விளங்க, இடக்கரங்களில் கமண்டலமும் ஓலைச்சுவடியில் கொண்டு விளங்குகிறாள். மூன்றாவது சிற்பத்தில் தன் வலக்கரங்களில் அட்சமாலையும் அபய முத்திரையும் இடது கரங்களில் கமண்டலமும், தாமரையும் ஏந்தியுள்ளாள்.

பெருவேளூர் (மணக்கால் ஐயம்பேட்டை): அப்பர் சம்பந்தர் முதலியோரால் பாடல் பெற்ற ஸ்தலமான இவ்வூரில் சரஸ்வதி சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதாகக் கூறப்படுகிறது. பிரம்ம தேவன் தன் வலப்புறம் வாணியுடனும், இடதுபுறம் சரஸ்வதியுடனும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால், இத்தல ஈசர் வாணீ சரஸ்வதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.

திருவீழிமிழலை: முதலில் ராமேஸ்வரம் சென்று ராமநாதஸ்வாமியை தரிசனம் செய்துவிட்டு பின்னர் காசி சென்று காசி விஸ்வநாதரை தரிசித்து மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாதஸ்வாமியை தரிசிப்பர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இத்திருக்கோயிலில் பத்ர பீடத்தில் சுகாசனத்தில் சதுர் புஜங்களுடன் சரஸ்வதி அமர்ந்திருக்கிறாள். பின் கரங்களில் அட்சமாலை, சுவடி முன் கரகங்களில் வீணையை ஏந்தியபடி காட்சி தருகிறாள். ஸர்வாலங்கார பூஷிதையாக காட்சி தரும் சரஸ்வதியின் திருவுருவை கண்டு தரிசித்து அவள் அருள் பெறுவோம்.

காஞ்சிபுரம்: முக்தி தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பழம்பெரும் திருக்கோயில்களில் ஒன்று கச்சபேஸ்வரர் திருக்கோயில், இங்கு சியாமளா தேவி தனி சந்நதி கொண்டு விளங்குகிறாள். சரஸ்வதி சிவனை வழிபட்டு அருள் பெற்ற தலம் இதுவாகும். இவள் தன் திருக்கரங்களில் வீணை, கிளி, பாசம், அங்குசம், குயில், தாமரை, நீலோத்பலம், மலரம்பு கரும்புவில் ஆகியவற்றை ஏந்திய நிலையில் காட்சி தருகிறாள். காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலிலும் மகாசரஸ்வதி தனிச் சந்நதி கொண்டு அருள்புரிகிறாள்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள சரஸ்வதி சிற்பம் சிறப்புடையது. ‘இதைப் பார்த்தால் கஜலட்சுமி போலிருக்கும். ஆனால், தேவியின் கரங்களில் உள்ள கலசமும், சுக்கமாலையும், புத்தகமும், அபயஹஸ்தமாகக் காணப்படும் வலது கரத்தையும் பார்த்தால் இது சரஸ்வதியின் சிலை என்பதில் ஐயமில்லை’ என்று டாக்டர் இரா. நாகசாமி கூறுகிறார்.

திருக்கண்டியூர்: அட்ட வீரட்டானத் திருத்தலங்களில் ஒன்றான கண்டியூர் சிவதலம் பாடல் பெற்ற திருத்தலமாகும். திருவையாறு தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்தலத்தில் தான் பிரம்ம தேவனின் ஐந்தாவது தலை கொய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக இத்தலத்தீசர் ஸ்ரீபரம சிரக்கண்டீசர் என்று அழைக்கப்படுகிறார். மூலவருக்கு பக்கத்தில் பிரம்ம தேவனும் சரஸ்வதி தேவியும் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர். இங்குள்ள பிரம்மதேவர் தாமரை, ஜபமாலை ஏந்தியும் அவருடைய வலப்புறம் அமர்ந்துள்ள சரஸ்வதி தேவி சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சி தருகிறாள்.

காளத்தி: ஒரு முனிவரின் சாபத்தின் காரணமாக ஊமையான சரஸ்வதி தேவி இவ்வூர் வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, தினமும் அதில் மூழ்கி குளித்து இறைவனை வணங்கி தனது ஊமை பாவம் நீக்கப்பெற்றாள். அதனால் இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் கல்வியறிவு வளரும் என நம்புகின்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?