திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் வெண்கல திருவுருவச் சிலையின் இடது கையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ காவித் துண்டை கட்டியுள்ளனர். இதை பார்த்ததும் இன்று காலை அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருக்கழுக்குன்றத்தின் பிரதான பஜார் வீதியில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இச்சிலையை அப்பகுதி அதிமுக நிர்வாகிகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், பூங்காவில் இருந்த எம்.ஜி.ஆரின் வெண்கலச் சிலையின் கைப்பகுதியில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் யாரோ காவி துண்டை கட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், இவ்வழியே இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்ட சிலர், எம்ஜிஆரின் சிலையின்இடது கைப்பகுதியில் காவி துண்டை கட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகினர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் குவிந்து, எம்.ஜி.ஆரின் சிலையின் கையில் காவி துண்டு கட்டியவர்கள்மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்களிடம் எம்.ஜி.ஆர் சிலையின் கையில் காவித் துண்டு கட்டியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் அதிமுக பேரூர் செயலாளர் தினேஷ்குமார் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்போரூரில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு யாரோ காவி துண்டு அணிவித்ததால் ஏற்பட்ட பதட்டம் தணிவதற்குள், இன்று திருக்கழுக்குன்றத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் திருப்போரூரில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு யாரோ காவி துண்டு அணிவித்ததால் ஏற்பட்ட பதட்டம் தணிவதற்குள், இன்று திருக்கழுக்குன்றத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.