லூதியானா: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதை தொடர்ந்து பிரதமர் மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வீடு வீடாக சென்று குங்குமம் வழங்க பா.ஜ திட்டமிட்டது. இதை அறிந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு பெண்ணுக்கும் மரியாதை உண்டு, அவர்கள் தங்கள் கணவரிடமிருந்து மட்டுமே குங்குமத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏன் முதலில் உங்கள் திருமதிக்கு குங்குமம் கொடுக்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார்.
தற்போது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் விமர்சனம் செய்துள்ளார். லூதியானா சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற அவர்,’ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாஜ வாக்குகளை கோருகிறது. பா.ஜவினர் குங்குமத்தை நகைச்சுவையாக மாற்றியுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் குங்குமம் அனுப்புகிறார்கள். அதை மோடியின் பெயரில் வழங்கப்பட்ட குங்குமம் என்று சொல்வீர்களா? இது ‘ஒரு நாடு, ஒரு கணவர்’ திட்டமா?’ என்று கேட்டு விமர்சனம் செய்தார். ஆபரேசன் சிந்தூரை கொச்சைப்படுத்தி நாகரீகமற்ற முறையில் ஒரு மாநில முதல்வரே பேசுவது கண்டனத்துக்குரியது என்று பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.