நாகை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நாகையில் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் வகுப்புவாத சக்திகள் கால் ஊன்றுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஒருபோதும் அனுமதிக்காது. ஒன்றிய அரசு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் தனது கொள்கையை மாற்றி கொள்ளவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை ஒன்றிய அரசு செய்து வருகிறது. திருவள்ளுவர் படத்தில் காவி சாயம் பூசி பொதுமறை நூலை சிறுமைப்படுத்தும் முயற்சியை கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கொள்கிறார். மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்த கவர்னர் முயற்சி செய்து வருகிறார்.
குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவது சர்வாதிகாரத்தை நோக்கி நாடு நகர்வதற்கு முன்னோட்டமாக இருக்கிறது. வக்பு வாரிய சொத்துகள் குறித்து புதிய திருத்தங்களை கொண்டுவர முயற்சிப்பதை கண்டிக்கிறோம். மகாராஷ்டிரா தேர்தலில் இஸ்லாமிய வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு பேராபத்தாகும்.
அதானி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ஏற்கனவே கூறியுள்ளோம். தற்போது அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. மோடி அரசு அதானியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் என்ன பேசுகிறார் என்று அவருக்கே புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.