கோபி: கோபி அருகே உள்ள கொடிவேரி அணை திடீரென மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும், குறைந்த செலவில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை நாட்களில் மட்டுமன்றி பண்டிகை நாட்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.
மேலும் அணையின் மேல் பகுதியில் பரிசல் பயணம் செய்தும், கடற்கரை போன்ற மணற்பரப்பில் அமர்ந்து சுவையான மீன் வகைகளை சாப்பிட்டும், பூங்காவில் பெண்கள், குழந்தைகள் உற்சாகமாக விளையாடி விடுமுறையை கழிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அணைக்கு வந்திருந்தனர். காலை முதலே அணையில் கொட்டும் தண்ணீரில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்து கொண்டிருந்தபோது, பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 650 கன அடியை தாண்டியது. இதனால் அணையில் இருந்து பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேற தொடங்கியது.
இதனால் அணையில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் அவசர, அவசரமாக உடனடியாக வெளியேற்றப்பட்டு அணை மூடப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அணை மூடப்பட்ட நிலையில் பவானி ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், துணி துவைத்தல், கால்நடைகளை மேய்த்தல், பரிசல் பயணம் செய்யவும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். கொடிவேரி அணை திடீரென மூடப்பட்டதால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள பாலத்தின் மீது நின்று ஏமாற்றத்துடன் அணையை ரசித்து சென்றனர்.