சென்னை: மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர் துறைகளுக்கான பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அத்துமீறல்களை தடுப்பதற்கான ஒரு ஆலோசனை குழு அமைக்க வேண்டும், மருத்துவமனைகள் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருவதற்கு அனுமதி சீட்டு கொடுக்க வேண்டும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு நேரத்தில் பணியாற்றும்போது சுற்றுப்புறத்தை வெளிச்சம் நிறைந்த பகுதியாக வைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கையை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும், ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருந்த பாதுகாப்பு நடவடிக்கையை அமல்படுத்துவது தொடர்பாகவும் தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.