புதுடெல்லி: கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விமான நிலையம் அருகே உள்ள கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில் 275 பேர் பலியானார்கள். இந்த நிலையில் வழக்கறிஞர் அஜய் பன்சால் என்பவர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘ கடந்த மே 20ம் தேதி நானும் எனது மனைவியும் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் சிகாகோ சென்றோம். அப்போது விமானம் நடு வானில் பறக்கும் வரை விமானத்தின் ஏசி செயல்படவில்லை. மேலும் விமானத்தில் இருந்த பொழுதுபோக்கு அமைப்புகளும் பழுதாக இருந்தது. இதுகுறித்து ஏர் இந்திய விமான நிறுவனத்திடம் புகார் அளித்தோம் ஆனால் அவர்கள் ரூ.10,000 இழப்பீடு வழங்கி பிரச்னையை முடித்துக் கொள்வதாக தெரிவித்து விட்டனர்.
ஏர் இந்தியா விமானத்தில் சமீப காலமாக கடுமையான குறைபாடுகள் உள்ளது என கண்டறிந்த பிறகும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஏர் இந்தியா நிறுவனத்திடம் உள்ள போயிங் ரக விமானங்களில் பாதுகாப்பு சோதனைகள் முடிவடையும் வரை விமானங்களை இயக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.