இன்னும் 2 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒருபுறம் கனமழை கொட்டும் என வானிலை மையம் எச்சரித்தாலும், மக்கள் அனைவரும் ஜவுளிக்கடைகள், ஷாப்பிங் என கடை வீதிகளில் மையம் கொண்டுள்ளனர். ‘அள்ளே அள்ளு… அள்ளே அள்ளு….’ என்ற பாணியில் பிடிச்சதை எடுப்போம் என்பதை விட, கிடைச்சதை எடுப்போம் என்கிற அளவுக்கு கடைகளில் கட்டுக்கடங்காத நெரிசல். பஜாரை நோக்கி படையெடுக்கும் வாகனங்களாலும் சென்னை, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அவ்வப்போது மிரட்டும் மழையாலும் மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி பதுங்க வேண்டியிருக்கிறது. நாட்கள் குறைய குறைய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், கடை உரிமையாளர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். மறுபுறம் ஐபோன் வாங்கினால், ஸ்மார்ட் வாட்ச் ப்ரீ… பிரிட்ஜ் வாங்கினால் ஏர் கூலர் ப்ரீ என்ற அறிவிப்புகளை வெளியிட்டு, வீட்டு உபயோக பொருட்கள், செல்போன் விற்பனை கடைகளும் தங்கள் பங்குக்கு தீபாவளி விற்பனையை மெருகேற்றி வருகின்றன. பிளாட்பார கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தீபாவளிக்கு துணி, இனிப்பு, கார வகைகள் வாங்கியாச்சு… அடுத்து என்ன? அதேதான்… வாண வேடிக்கையை நிகழ்த்திக் காட்டும் பட்டாசுகள் வாங்க வேண்டாமா? என்னதான் காசை கரியாக்கும் செயல் என்றாலும், வெடி வெடிக்காத தீபாவளி சிறக்குமா என்ன? அந்த வகையில் நடப்பாண்டிற்கான தீபாவளியை வண்ணமயமாக கொண்டாட, தமிழ்நாடு முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2, 3 மாதங்களாக சிவகாசியில் தயாரான பல்லாயிரம் கோடி பட்டாசுகள் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே நடந்த வெடி விபத்துகள் சங்கடப்படுத்தினாலும், அரசின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை காரணமாக பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
பட்டாசு கடை வைப்பவர்கள், தீயணைப்புத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி கடைகளை அமைக்க வேண்டும். தீத்தடுப்பு சாதனங்கள் அவசியம் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், மார்க்கெட்டுக்கு லேட்டஸ்ட் டிரெண்டாக உலகக் கோப்பை வெடி முதல் குழந்தைகளை கவரும் டோரா வெடிகள் வரை விற்பனைக்கு வந்துள்ளன. குட்டீஸ் முதல் குடுகுடு தாத்தா வரை கொண்டாடி மகிழும் வகையில் அதிகம் ஆபத்தில்லாத வெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர், உடல் நலம் பாதிப்படைந்தோரை மனதில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். வெடிக்கும்போது அலட்சியமாக செயல்படக்கூடாது.
மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை பின்பற்றி பாதுகாப்பான முறையில் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுவோம். அதே நேரம் சுற்றுச்சூழல் மாசுவையும் கருத்தில் கொள்ள வேண்டும். மகிழ்ச்சி எவ்வளவு தூரம் முக்கியமோ, அதை விட முக்கியம் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது ஆகும். எனவே, தீபாவளி இறுதிக்கட்ட ஷாப்பிங், பட்டாசு வெடித்தலை பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்.