புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை சம்பவத்தை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை மருத்துவர்கள் நடத்தினர். தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ), பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைத் தடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளை கட்டாய பாதுகாப்பான மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். முதல் கட்டமாக கட்டாய பாதுகாப்பு உரிமை சட்டத்தை கொண்டு வரவேண்டும். மருத்துவமனைகளில் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் விமான நிலையங்களில் உள்ளதைப் போலவே இருக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்புப் பணியாளர்களை நியமித்தல் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மருத்துவர்களைப் பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்குகளை விசாரித்து நீதியை வழங்க வேண்டும்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கொல்கத்தா மருத்துவமனைகளில் நடந்த வன்முறை சம்பவங்களால், பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை. குற்றமும் காட்டுமிராண்டித்தனமும் தேசத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொல்கத்தா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவர் 36 மணி நேரம் ெதாடர்ச்சியாக பணிபுரிந்துள்ளார். அவர் ஓய்வெடுக்க பாதுகாப்பான இடமோ, போதிய கழிப்பறை வசதியோ இல்லை. இந்த குறைபாடுகள் காரணமாக, மருத்துவர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குரியாகி உள்ளது.
சுதந்திர தினத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துகளை பாராட்டுகிறோம். இந்த நேரத்தில் உங்களது தலையீடு இருக்கும்பட்சத்தில், பெண் மருத்துவர்களுக்கு மட்டுமின்றி பணியிடத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்திய மருத்துவர்களில் 60 சதவீதம் பெண்கள் உள்ளனர். நர்சிங் துறையில் 85 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கான பணியிடத்தில் அமைதியான சூழல், பாதுகாப்பு கிடைத்திட உறுதி வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.