கோவை: சத்குரு தொடர்பாக பரப்பப்படும் போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க, டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவினை இன்று (30/05/2025) பிறப்பித்தது. உலகளாவிய அளவில் சத்குருவிற்கு இருக்கும் செல்வாக்கினை கருத்தில் கொண்டு அவரின் பெயர், உருவம் மற்றும் குரல் ஆகியவற்றை ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட செய்திகளும், காணொளிகளும் பல்வேறு மோசடி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஈஷா அறக்கட்டளை இதற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது, குறிப்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY), சைபர் காவல்துறை மற்றும் சமூக ஊடக நிறுவனங்களிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு சுற்றறிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பதிவுகள் மூலம் இவை யாவும் மோசடிகள் என்ற அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறையும், சத்குரு மற்றும் சில பிரபலங்களின் பெயரால் நடைபெறும் இம்மாதிரியான மோசடிகளைப் பற்றி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டது. எனினும், சில தளங்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டே உள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக சத்குருவும் ஈஷா அறக்கட்டளையும் பதிவு செய்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி அவர்கள், “சத்குருவின் பெயர், உருவம் மற்றும் ஆளுமையை தவறாக பயன்படுத்தும் பதிவுகளை ஆன்லைன் தளங்களில் இருந்து நீக்க” இடைக்கால உத்தரவினைப் பிறப்பித்தார்.
நீதிமன்ற உத்தரவை வரவேற்று ஈஷா அறக்கட்டளை பதிவிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “சத்குருவின் தனியுரிமைகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த மோசடி செயல்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள், சத்குரு கைது செய்யப்பட்டதாக போலியாக வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் நிதி முதலீடுகளை ஊக்குவிக்கும் தவறான விளம்பரங்களை உள்ளடக்கியவை. ஈஷா அறக்கட்டளை இத்தகைய போலியான பதிவுகளை அகற்றவும், மக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.