மும்பை: ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் இலங்கை அணியை இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும் முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டிகளில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய 6 அணிகள் மோதுகின்றன. முதல் போட்டி நேற்று முன்தினம் இரவு இந்தியா – இலங்கை அணிகள் இடையே மும்பையில் நடந்தது. சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்கள் ராயுடு 5, சச்சின் 10 ரன்னில் வீழ்ந்தனர். பின் வந்தோரில் குர்கீரத் சிங் 44, ஸ்டூவர்ட் பின்னி 68, யுவராஜ் சிங் 31, யூசப் பதான் 56 ரன் குவித்தனர். இதனால் இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்தது. பின், 223 ரன் வெற்றி இலக்குடன் இலங்கை களமிறங்கியது. கேப்டன் குமார் சங்கக்கரா, உபுல் தரங்கா துவக்க வீரர்களாக களமிறங்கினர். தரங்கா 10ல் அவுட்டானார். சங்கக்கரா சிறப்பாக ஆடி 51 ரன் குவித்தார்.
பின் வந்த வீரர்களும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டதால் கடைசி ஓவரில் 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. அந்த ஓவரை வீசிய இந்திய வீரர் அபிமன்யு மிதுன் நேர்த்தியாக பந்து வீசி 4 ரன் மட்டுமே தந்தார். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்தது. அதனால் இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன், இந்தியாவின் ஸ்டூவர்ட் பின்னி.