சில விவசாயிகள் புதிய பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அதில் சிலர் சறுக்கி விடுவதுண்டு. விவரம் தெரிந்த விவசாயிகள் அனைத்துத் தடைகளையும் தாண்டி வெற்றி கண்டுவிடுகிறார்கள். அப்படி விழுப்புரம் மாவட்டத்தில் முதன்முறையாக சப்ஜா விதைகளைப் பயிரிட்டு வெற்றி கண்டிருக்கிறார் விக்கிரவாண்டி தாலுகா வேம்பி கிராமத்தைச் சேர்ந்த கமல்கேசவன். கரும்பு, வேர்க்கடலை, காராமணி என வழக்கமான பயிர்கள் விளையும் இந்த ஊரில் சப்ஜாவை பயிரிட்டு சாதித்திருக்கும் கமல்கேசவனைச் சந்தித்தோம். அவரது நிலத்தில் பயிர் செய்யப்பட்ட சப்ஜா தற்போது அறுவடைக்கு வந்திருக்கிறது. அறுவடைப் பணிகளில் ஈடுபட்டவாறே நம்மிடம் பேச ஆரம்பித்தார். “தாத்தா காலத்தில் இருந்தே விவசாயம்தான் எங்களுக்கு பிரதான தொழில். அப்பாவைத் தொடர்ந்து நான் கடந்த 15 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். எனக்குச் சொந்தமாக இங்கு 10 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இதில் வழக்கமாக கரும்பு, வேர்க்கடலை என மாற்றி மாற்றி பயிர் செய்வோம். மானாவாரி பயிராக காராமணி விதைப்போம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக பன்றித் தொல்லை அதிகம் இருப்பதால் காராமணி விவசாயம் கைகொடுக்கவில்லை. அதனால், மாற்றுப் பயிர் ஏதாவது செய்யலாம் என நினைத்தேன். அப்போதுதான் நண்பர் ஒருவர் மூலம் சப்ஜா விதைகள் குறித்து கேள்விப்பட்டேன். இதை நமது நிலத்தில் பயிர்செய்து பார்க்கலாமே என முன்வந்தேன். அந்த நண்பர் மூலமே சப்ஜா விதைகளை வரவைத்து 10 ஏக்கர் முழுவதும், சப்ஜா விதைகளை விதைத்தோம். ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் 10 ஏக்கருக்கு பத்து கிலோ விதைகள் வாங்கி விதைத்தேன். ஒரு கிலோ விதை ரூ.400 என வாங்கினேன்.
சப்ஜா பயிரிடும் நிலம் சமனாக இருக்க வேண்டும். அதேபோல், நன்கு உழப்பட்டு மண் உதிரியாக இருக்க வேண்டும். அதுபோல் எனது நிலத்தை தயார்படுத்தினேன். நிலம் தயார் செய்த பின்பு அடி உரமாக ஒரு ஏக்கருக்கு காம்ப்ளக்ஸ் மற்றும் டிஏபி உரம் ஒரு மூட்டை கொடுக்க வேண்டும். அதன்பின், இந்த விதைகளை விதைக்கலாம். அதாவது, சப்ஜாவைப் பொறுத்தவரை இரண்டு முறையில் நடலாம். ஒன்று நாற்றுமுறை நடவு. இன்னொன்று விதைத்தல் முறை. நாற்று விட்டு நடவு செய்தால் 90 நாட்களில் அறுவடை செய்யலாம். நேரடியாக விதைத்தால் 120 நாட்களில் அறுவடை செய்யலாம். ஒருமுறை சப்ஜா விதைகளை விதைத்தால் இரண்டு முறை பயனடையலாம். அதாவது, அறுவடை செய்யும்போது செடியின் அடிப்பகுதியை பூமியிலே விட்டுவிட்டு மேலே உள்ள செடியை வெட்டி எடுப்பதால் மீதமிருக்கிற செடி வளர்ந்து இன்னொரு முறையும் நமக்கு விளைச்சல் கொடுக்கும். இந்த செடிக்கு 8 நாட்களுக்கு ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும். அதேபோல், இரண்டு முறை களை எடுக்க வேண்டும். கோடைக்காலங்களில் அறுவடை செய்வதே சிறந்தது. ஏனெனில் மழை நேரத்தில் அறுவடை செய்தால் விளைச்சல் எடுக்க முடியாது. நான் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் விதைத்து 450 கிலோ விதைகளை மகசூலாக எடுத்தேன். ஒரு கிலோ விதை தற்போது மார்க்கெட் நிலவரப்படி ரூ.200ல் இருந்து ரூ.250 வரை விற்பனை ஆகிறது. அதேபோல், இந்த விவசாயத்தில் ஒரு ஏக்கருக்கு செலவு எனப் பார்த்தால் ரூ.15 ஆயிரம் வரை ஆகும். ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் பார்க்கலாம். ஜூஸ் மற்றும் மருத்துவப் பயன்களுக்காக இந்த விதைகள் அதிகம் தேவைப்படுகிறது. இதனால் இதனை எளிதாக விற்பனை செய்துவிடலாம்’’ என மகிழ்ச்சியோடு கூறி முடித்தார் கமல்கேசவன்.
சப்ஜா செடிகளில் இருந்து விதைகளை பிரித்தெடுப்பதற்கு இப்போது நவீனக் கருவிகள் வந்துவிட்டன. இதனால் அறுவடைப் பணி எளிதாகி இருக்கிறது. சப்ஜாவில் மறுதாம்பு முறையில், இரண்டாவது அறுவடை எடுக்கும்போது கூடுதல் மகசூல் கிடைக்கும்.
சப்ஜா சாகுபடியில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. இந்தச் செடிகளை ஆடு, மாடுகள் மேயாது. அதேபோல் எந்த விதமான பூச்சித் தாக்குதலும் இருக்காது. இதனால் பெரிதாக கவலைப்படத் தேவை இருக்காது.
சப்ஜா பொதுவாக நேரடி விதைப்பாகவும், நாற்று பாவி நடவு முறையிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நாற்று நடவு முறையே சிறந்தது என்கிறார் கேசவன். இந்த முறையில் விளைச்சல் கூடுதலாக கிடைக்கும் என்கிறார்.