18 முறை சபரிமலை சென்று 18 படிகளிலும் தேங்காய் உடைத்து வழிபட்டவர்கள் மட்டுமே மற்றவர்களை வழிநடத்திச் செல்லும் குருசாமி என்ற பட்டம் பெறத் தகுதி பெறுவார்கள். இதில் ஐதீகம் மட்டுமல்லாது அனுபவமும் ஒரு காரணமாகக் கொள்ளப்படுகிறது. காட்டில் எந்த வழியில் சென்றால் பாதுகாப்பாக இருக்கும். எங்கெங்கு என்ன இருக்கும், ஒருவருக்கு உடல்நலம் குன்றிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் 18 வருடங்களில் ஒருவருக்கு மனப்பாடம் ஆகிவிடும், சபரிமலை யாத்திரையில் குருஸ்வாமியின் பங்கு மகத்தானது. குரு என்பவர் ஆன்மிக வழிகாட்டி. யாத்திரையின் நாளும் நேரமும் குறிப்பவரும் இவர்தான். சரணம் ஒலிக்க இருமுடிகட்டி தீபாராதனை செய்து, தலையில் ஏற்றி யாத்திரை புறப்பாட்டை நெறிப்படுத்துபவரும் அவர்தான்.
மாலை அணிதல்
சபரிமலை யாத்திரையின் முதல் அம்சமே மாலையிடுதல்தான். மாலை அணிவதற்கு கார்த்திகை மாதமே ஏற்றதாகும். மாலை அணியும் முன் பெற்றோரையும், குருஸ்வாமியையும் வணங்கிவிட்டு குருவின் மூலம் மாலை அணிய வேண்டும். குருஸ்வாமி இல்லாவிட்டால் அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோவியிக்குச் சென்று ஐயப்பனையே குருவாக நினைத்து மாலை அணிந்து கொள்ளலாம். துளசிமணி மாலை அணிந்து அன்று முதல் நீலம், கறுப்பு அல்லது காவி உடைகளையே அணிய வேண்டும்.
இருமுடி கட்டு
சபரிமலைக்கு விரதமிருந்து செல்வோர் எடுத்துச் செல்லும் முக்கியமான ஒன்று இருமுடி கட்டு. இரண்டு பகுதிகளாகக் கொண்ட இந்தக் கட்டின் முன் முடியில் நெய் தேங்காய் மற்றும் பூஜை பொருட்களும், பின் முடியில் தங்களது தேவைக்கான அரிசி போன்ற ஆகாரப் பொருட்களும் வைத்துக் கொள்ள வேண்டும். இதில் முன்முடி தெய்வீகமானது. பின்னது வழித்துணைக்கானது. முன்முடியின் துணையே பின்முடி. ஐயப்பனை நெருங்க, நெருங்க முன்முடியின் கனம் கூடி பின்முடியின் கனம் குறையும். இருமுடி சுமத்தல் இருவினை சுமத்தல் என்பதாகும். இதை நன்கு சிந்தித்தால் வாழ்க்கைப் பயணத்தில், இரை முடியும், இறை முடியும் இணைந்து இருமுடியின் குறியீடாகவே இருப்பது தெரியவரும்.
நெய் தேங்காய்
இருமுடியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு அம்சம். நெய் தேங்காய். இது மனித இதயம் போன்றது. பிறக்கும் போது நமது இதயம் களங்கமற்றதுதான். ஆனால் அதில் களங்கம் ஏற்படும்போது இதயத்திற்கு மாசு உண்டாகிறது. தேங்காயில் உள்ள இளநீர் உலகியல் சுவை போன்றது. தேங்காயின் ஒரு கண்ணைத் திறந்து அதை அப்புறப்படுத்தி விட்டு, அதில் ஞானமென்னும் நெய்யை ஊற்றி அதைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த தேங்காயை உடைப்பது நமது இதயத்தையே பிளந்து காட்டுவது போன்றது. நமது தூய்மையான மனதின் தன்மையைக் காட்டவே இந்த அம்சம். இதனால்தான் ஐயப்பன் நெய் அபிஷேகப் பிரியனாக இருக்கிறார்.