திருவனந்தபுரம்: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இருமுடிக் கட்டில் பத்தி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றை கொண்டு வர வேண்டாம் என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் இவ்வருட மண்டலகால பூஜைகள் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மண்டல காலத்தில் தினமும் ஆன்லைன் மூலம் பதியும் 70 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பக்தர்கள் தங்களது இருமுடிக்கட்டில் பத்தி, பன்னீர், கற்பூரம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டாம் என்று சபரிமலை தந்திரி கண்டரர் ராஜீவரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இருமுடிக்கட்டில் பக்தர்கள் என்னென்ன பொருட்களை கொண்டுவர வேண்டும் என்பது குறித்து அவர் தேவசம் போர்டுக்கு ஒரு பட்டியல் கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பது: இருமுடிக் கட்டில் முன் கட்டு, பின் கட்டு என இரண்டு கட்டுகள் இருக்கும். பண்டைய காலத்தில் சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து தான் வருவார்கள். அப்போது வழியில் தங்கியிருந்து சமைத்து சாப்பிடுவதற்காக அரிசி, தேங்காய் மற்றும் உணவுப் பொருட்களை கொண்டு வருவார்கள். அவை பின் கட்டில் வைத்திருப்பார்கள். முன் கட்டில் அரிசி, நெய் தேங்காய் உள்பட சபரிமலையில் சமர்ப்பிக்க வேண்டிய பொருட்கள் இருக்கும். ஆனால் இப்போது இருமுடிக்கட்டில் தேவையில்லாத பல பொருட்களை பக்தர்கள் கொண்டு வருகின்றனர். பத்தி, பன்னீர், கற்பூரம் ஆகியவற்றையும் இருமுடிக்கட்டில் வைக்கின்றனர். இவை எதுவுமே சபரிமலையில் தேவையில்லை.
இவற்றை பக்தர்கள் சபரிமலையில் ஆங்காங்கே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதில் பிளாஸ்டிக்கும் இருப்பதால் பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
எனவே சபரிமலை வரும் பக்தர்கள் இருமுடிக் கட்டில் பத்தி, பன்னீர், கற்பூரம் ஆகியவற்றை வைக்க வேண்டாம். பின் கட்டில் சிறிது அரிசி மட்டும் வைத்திருந்தால் போதும். முன்கட்டில் புழுங்கல் அரிசி, நெய் தேங்காய், வெல்லம், கதலிப் பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் காணிப்பொன் ஆகியவை மட்டும் போதும். இவ்வாறு அவர் தேவசம் போர்டுக்கு அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.