சென்னை: வரும் 15ம் தேதி முதல் ஜன.16ம் தேதிவரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு வரும் 15ம் தேதி முதல் ஜன.16ம் தேதி வரை சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன. சபரிமலை தேவஸ்தான அறிவிப்பின்படி டிச.27 முதல் 30ம் தேதிவரை மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிச.26 முதல் 29ம் தேதி வரை சிறப்புப் பேருந்து இயக்கப்பட மாட்டாது.
இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு, 9445014452, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.