திருவனந்தபுரம்: சபரிமலைக்கு எத்தனை பக்தர்கள் வந்தாலும் தரிசனம் செய்யலாம் என்று தேவசம் போர்டு தலைவர் தெரிவித்தார். இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் வருகை கடந்த வருடத்தை விட அதிகமாக உள்ளது. இந்த மண்டல காலத்தில் நடை திறந்த கடந்த 10 நாட்களில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி விட்டது.
இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நேற்று சபரிமலையில் நிருபர்களிடம் கூறியது: இந்த மண்டல காலத்தில் சபரிமலையில் பக்தர்களின் வருகையும், வருமானமும் கடந்த வருடத்தை விட அதிகரித்துள்ளது. நடை திறந்த 9 நாட்களில் கடந்த வருடத்தை விட 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனம் செய்யலாம். ஆனால் எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கு தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.