கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே, சபரிமலை செல்ல மாலை போடும் முன்பு மூச்சு முட்ட மதுகுடித்து கறி சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆண்டியூர் கோணார்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சிவா மகன் மணிகண்டன் (28), கட்டிட மேஸ்திரி. இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், 6 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர்.
மணிகண்டன் சிறு வயது முதலே, ஆண்டுதோறும் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டும் நேற்று (4ம் தேதி) காலை, சபரிமலைக்கு மாலை அணிய முடிவு செய்திருந்தார். மாலை அணிந்த பிறகு மது அருந்தவும், அசைவ உணவு சாப்பிடவும் கூடாது என்பதால், நேற்று முன்தினம் மாலையிலிருந்து மது அருந்தியுள்ளார். மூச்சு முட்ட மது குடித்தவர், அளவுக்கதிகமாக இறைச்சி சாப்பிட்டு விட்டு, இரவு வீட்டுக்கு வந்து தூங்கியுள்ளார்.
நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில், மணிகண்டனுக்கு திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் கதறித் துடித்தார். இதை கண்ட அவரது மனைவி மற்றும் தாய், டூவீலரில் அவரை அழைத்துக் கொண்டு மகனூர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். ஆனால், அவருக்கு உடல்நிலை மோசமாகவே, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிமலை செல்ல மாலை அணிவதற்கு முந்தைய நாள், அளவுக்கதிகமாக மது அருந்தி கறி சாப்பிட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.