திருவனந்தபுரம்: நாட்டில் வறுமை நீங்கி விவசாயம் செழிப்பதற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான நிறைபுத்தரிசி பூஜை நேற்று காலை நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு சாத்தப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.45க்கும் 6.30 மணிக்கும் இடையே நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.
பாலக்காடு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நெற்கதிர்கள் பூஜைக்குப் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.