திருவனந்தபுரம்: சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் தான் ₹5 லட்சம் விபத்து இன்சூரன்ஸ் கிடைக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார். இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 16ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இவ்வருடத்திற்கான மண்டல கால பூஜைகள் தொடங்கும்.
இந்நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியது:
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன. நிலக்கல்லில் கடந்த வருடம் 7500 வாகனங்களை மட்டுமே நிறுத்த முடிந்தது. இந்த வருடம் கூடுதலாக 2000 வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ₹5 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை கோயில் அமைந்திருக்கும் பத்தனம்திட்டா மாவட்டம் தவிர ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி மரணமடைந்தால் அவர்களுக்கு ₹5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே இந்த இன்சூரன்ஸ் கிடைக்கும்.
சபரிமலையில் மரணமடையும் பக்தர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கு ஆகும் அனைத்து செலவையும் தேவசம் போர்டு ஏற்கும். தினமும் ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் 10 ஆயிரம் பேருக்கும் முன்பதிவு செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் அனைவரும் தரிசனத்திற்கு வருவதில்லை. எனவே உடனடி கவுண்டர்களில் முன்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். சபரிமலைக்கு எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
* இம்முறை 24 மணி நேரமும் சபரிமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
* காலையில் கஞ்சி உப்புமா, மதியம் புலாவ், இரவில் கஞ்சி, உப்புமா ஆகியவை வழங்கப்படும்.
* அப்பம், அரவணை ஆகியவை போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
* 15ம் தேதி நடை திறக்கும்போது 40 லட்சம் டின் அரவணை தயாராக இருக்கும்.