Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதர்கள் மண்டி கிடக்கும் சபரி அணை மதகுகள் சீரமைக்கப்படுமா?... விவசாயிகள் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: பழையாற்றில் உள்ள தடுப்பணை மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். குமரி மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியாக விளங்குகிறது பழையாறு. முறையாக பராமரித்து இருந்தால், குமரியின் சொர்க்கமாக விளங்க வேண்டிய பழையாறு, இன்று குமரியின் கூவமாக மாறி இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அலட்சியம் காரணமாக ஒரு புறம் ஆகாயதாமரைகள் மண்டியும், கழிவு நீர் கலந்தும் ஆறு நாசமாகி விட்டது. மறுபுறம் ஆக்கிரமிப்பாளர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. கையூட்டு பெற்றுக் கொண்டு அதிகாரிகள் சிலரும், பொதுப்பணித்துறையினரும் பழையாற்றை பராமரிக்காமல் விட்டு விட்டனர் என்று விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மகேந்திரகிரி மலையின் வடமேற்கு திசையில் 17.6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளோடு என்னும் இடத்திலிருந்து பழையாறு உற்பத்தியாகிறது. சுருளோடு கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஆறு 44 கி.மீ தூரம் ஓடி மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கின்றது. பழையாற்றின் மூலம் 16 ஆயிரத்து 550 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் பயனடைகின்றது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயத்திற்கு மட்டுமின்றி வழியோர கிராமங்களில் குடிநீர் தேவையையும், தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்கின்ற பணியையும் இந்த ஆறு செய்கிறது. இந்த ஆற்றை நம்பி பல இடங்களில் குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படவும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. பழையாற்றின் குறுக்கே வீரப்புலி, குட்டை, பள்ளி கொண்டான், சாட்டுப்புதூர், செட்டித்தோப்பு, வீரநாராயணமங்கலம், சபரி, குமரி, சோழந்தட்டை, பிள்ளைப் பெத்தான், மிஷன் உள்ளிட்ட 14 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. தென்தாமரைக்குளம் அருகே தற்போது மேலும் ஒரு புதிய தடுப்பணை கட்டப்படுகிறது.

ஏற்கனவே உள்ள தடுப்பணைகள் பல இப்போது உடைந்தும், பெயர்ந்தும் பயனற்ற நிலைக்கு செல்கின்றன. ஷட்டர்கள் துருபிடித்து வர்ணம் பூசப்படாமல் காணப்படுகிறது. இவற்றின் சபரி அணையும் உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளன. சபரி அணை நாகர்கோவில் நகரையொட்டி உள்ளது. இந்த அணையின் மதகுகள் உடைந்தும், புதர்கள் மண்டியும் கிடக்கிறது. தற்போது மழை காலம் என்பதால், மதகுகள் திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  ஆனால் மதகுகள் புதர் மண்டி கிடப்பதால், தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது. மழை இல்லாத நாட்களில், மதகுகளை அடைத்து புதர்களை மட்டுமாவது பொதுப்பணித்துறை வெட்டி அகற்ற வேண்டும். அப்போது தான் தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்படும் நாட்களில், சீராக வெளியேற முடியும் என விவசாயிகள் கூறி உள்ளனர். வழக்கமாக கோடையில் நடைபெற வேண்டிய தூர்வாரும் பணிகள், இந்த முறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக நடக்க வில்லை.

தமிழ்நாடு அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்தும், அதை பயன்படுத்தாமல் வீணாகி விட்டனர். தோவாளை தூவச்சி பகுதியில் கூட, மழை காலத்தில் தான் தூர்வாரும் பணி நடந்தது. இதனால் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். புதிய தடுப்பணைகள், கால்வாய்கள் வெட்டி விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டாலும் கூட, இருக்கிற தடுப்பணைகள், கால்வாய்களை பாதுகாத்து வந்தால் தான் இன்னும் சில ஆண்டுகள் விவசாயத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது. எனவே நீர் நிலை பாதுகாப்புக்கு மாவட்ட நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சபரி அணை மட்டுமின்றி, பழையாறு தடுப்பணைகளில் உள்ள மதகுகள் அனைத்தையும் முறையாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.