பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில், 6ம் நிலை வீரரான செர்பியாவின் 38 வயதான நோவக் ஜோகோவிச், 3ம் நிலை வீரரான 28 வயது ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர். முதல் செட்டை 6-4 என ஸ்வெரெவ் கைப்பற்றிய நிலையில், அடுத்த 3 செட்டுகளையும், 6-3, 6-2, 6-4 என ஜோகோவிச் கைப்பற்றி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் சென்றார். இவ்வெற்றியின் மூலம் ஜோகோவிச், 51வது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஏற்கனவே 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அவர், அரையிறுதியில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னருடன் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
கடந்த 57 ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில், மிக அதிக வயதில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற வீரர் என்ற சிறப்பையும் ஜோகோவிச் பெற்றுள்ளார். இதற்கு முன் 1968ம் ஆண்டு அமெரிக்காவை சேதர்ந்த ரிச்சர்ட் கோன்சலஸ் தனது 40வது வயதில் பிரஞ்ச் ஓபன் அரையிறுதியில் விளையாடியிருந்தார். கடந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இடமான ரோலண்ட் கரோஸில், தனது 101வது வெற்றியை ஜோகோவிச் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடந்த முதல் அரையிறுதியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா-போலந்தின் இகா ஸ்வியாடெக் மோதினர். முதல் செட் ஆட்டத்தில் சபலெங்காவுக்கு இகா ஸ்வியாடெக் கடும் சவாலை அளித்தார். இறுதியில் 7-6 என அந்த செட்டை சபலெங்கா கைப்பற்றினார்.
2வது செட்டை சபலெங்கா இழந்த நிலையில், 3வது செட் ஆட்டத்தில் அதிரடியாக ஆடி வெற்றியை தன்வசப்படுத்தினார். இதன்மூலம் 7-6 (7-1), 4-6, 6-0 என்ற செட் கணக்கில் இறுதி போட்டிக்கு நம்பர்-1 வீராங்கனை சபலென்கா முன்னேறினார். 2வது அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப்- பிரான்சின் லோயிஸ் போய்சன் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனையோடு சபலென்கா மோதவுள்ளார்.