டாக்கா: சார்க் மாநாட்டை நடத்த வேண்டும் என்று வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவிடம் வலியுறுத்தி இருக்கிறார். ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் 8வது இந்திய பெருங்கடல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடையே வங்கதேசத்தின் வெளியுறவு துறை ஆலோசகர் தவ்ஹித் ஹோசைன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், 1996ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட கங்கை நீர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான விவாதங்களை தொடங்க வேண்டும். சார்க் நிலைக்குழு மாநாட்டினை நடத்த வேண்டியது அவசியம் என்றும் இதற்காக இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
* இன்று எல்லை பேச்சுவார்த்தை
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 55வது இயக்குனர் ஜெனரல் அளவிலான எல்லை ஒருங்கிணைப்பு மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொது மக்கள் மீது வங்கதேச குற்றவாளிகள் தாக்குதல் நடத்துவது, எல்லையில் வேலி அமைப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.